புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மிதமான மழை பெய்யும்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மிதமான மழை பெய்யும்
ADDED : செப் 13, 2025 12:44 AM
சென்னை:'வங்கக்கடலில் புதிதாக, ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ள நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்றும், நாளையும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் பகுதியில் தலா, 7; சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கடலுார் மாவட்டம் லக்கூர், திருவாரூர் ஆகிய இடங்களில் தலா, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
தெற்கு ஒடிஷா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் காணப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது மேற்கு, வடமேற்கு திசையில், அடுத்த இரண்டு நாட்களில் கடந்து செல்லக்கூடும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மறுநாள் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

