ADDED : செப் 09, 2011 11:17 AM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயிர் பாதுகாப்பு மேலாண்மையில், புதிய முதுகலை பட்டயப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை, ஐதராபாத் தேசிய பயிர்பாதுகாப்பு மேலாண்மை நிறுவனம் இணைந்து, புதிய முதுகலை பட்டயப்படிப்பை துவக்கியுள்ளது. தேசிய பயிர்பாதுகாப்பு மேலாண்மை நிறுவன தலைமை இயக்குநர் சத்தியகோபால் துவக்கிவைத்து பேசியதாவது: எங்கள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய அறிவியல் தனித்தன்மையை,வேளாண் பல்கலை மாணவர்களுக்கு பரிமாற்றம் செய்வதற்காக இப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. பிற நிறுவனங்களுடன் இணைந்து முதன்முறையாக முதுநிலை பட்டயப் படிப்பினை வழங்குகிறது. வேளாண் சூழலின் ஆய்வின் அடிப்படையில் பயிர் பாதுகாப்பு மேலாண்மை மேற்கொள்வது குறித்து கற்றுத் தரப்படும். மற்ற நிறுவனங்கள் கற்பிக்கும், பொருளாதார சேதநிலையின் அடிப்படையில் பயிர்பாதுகாப்பு மேலாண்மை மேற்கொள்ளும் முறையில் இருந்து, முற்றிலும் வேறுபட்டதாகும். மத்திய அரசு சட்டத்தின் அடிப்படையில் 'உயிர் பாதுகாப்பு ஆணையம்' கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த ஆணையம், பயிர் மற்றும் கால்நடை பாதுகாப்பு தொடர்பான பணிகளை மேற்பார்வையிடும். தேசிய பயிர் பாதுகாப்பு மேலாண்மை நிறுவனமும் இந்த ஆணையத்துடன் இப்பணியில் ஈடுபடும். இப்புதிய திட்டங்கள் பற்றி பட்டயப் படிப்பில் கற்றுத் தரப்படும். இப்படிப்பிற்கு வேலைவாய்ப்பு மிகுதியாக உள்ளன. இவ்வாறு, சத்தியகோபால் பேசினார்.
பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி பேசியதாவது: முதுநிலை பட்டயப்படிப்பு பல்கலை மாணவர்கள் கூடுதல் கல்வித் தகுதியோடு, வேலைவாய்ப்பு கிடைக்க ஏதுவாக இருக்கும். இதற்கான கல்விக் கட்டணத்தை மூன்று தனியார் நிறுவனங்கள் ஏற்றுள்ளன. தேசிய பயிர் பாதுகாப்பு நிறுவனத்திடம் கேட்டுள்ள அதிகப்படியான கட்டணச் சலுகையை வழங்குமாயின், மேலும் பல மாணவர்கள் பயனைடைவர், என்றார்.