கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன; ஸ்டாலின் நம்பிக்கையுடன் காத்திருப்பு
கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன; ஸ்டாலின் நம்பிக்கையுடன் காத்திருப்பு
ADDED : ஜூலை 02, 2025 12:39 AM

சென்னை: “தி.மு.க., கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகள் சேர உள்ளன; தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி கட்சிகள் கேட்கும் கூடுதல் தொகுதிகள் குறித்து பேசி சமாளிப்போம்,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
'ஓரணியில் தமிழகம்' என்ற பிரசார இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
'ஓரணியில் தமிழகம்' பிரசார இயக்கத்தை, 45 நாட்கள் நடத்துகிறோம். தமிழகம் முழுதும் இன்று பொதுக்கூட்டங்கள் நடக்க இருக்கின்றன.
நாளை வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க இருக்கின்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மூத்த நிர்வாகிகள், அவரவர் சொந்த ஓட்டுச்சாவடிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் செல்ல இருக்கின்றனர்.
துண்டு பிரசுரங்கள்
மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது. தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் இல்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி கொடுப்பதில்லை. தமிழ் மொழிக்கு 113 கோடியும்; சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளை குறைக்க, மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க முடிவு செய்து, ஓரணியில் தமிழகம் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல், பண்பாடு, மொழி என எல்லா வகையிலும், தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.
தி.மு.க., அரசின் திட்டங்கள், மக்களுக்கு நினைவில் இருக்கின்றன. இருந்தாலும், மக்களை சந்திக்கும்போது, தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்க இருக்கிறோம்.
வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில், 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்.
சமாளிப்போம்
தி.மு.க., கூட்டணியில் இன்னும் கூடுதல் கட்சிகள் சேரும் வாய்ப்பு உள்ளது. அதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. வாய்ப்பு வரும் நேரத்தில், அக்கட்சிகளை சேர்ப்போம்; கலந்து பேசி முடிவு செய்வோம்.
அதுமட்டுமல்ல; இப்போதுள்ள கூட்டணிக் கட்சிகள், கூடுதல் இடங்கள் கேட்க துவங்கி உள்ளன. தேர்தல் தேதி அறிவித்த பின், நாங்கள் உட்கார்ந்து பேசுவோம்; அதை சமாளித்து விடுவோம்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, தமிழகத்திற்கு அடிக்கடி வர வேண்டும். அவர் அடிப்படி வந்து சென்றால் தான், தி.மு.க.,வுக்கு கூடுதல் ஓட்டுகள் விழும். அவர் பேசுவது பொய் என்பதை மக்கள் அறிவர்.
தி.மு.க.,வின் அனைத்து தொகுதிகளின் நிர்வாகிகளையும் சந்திப்பேன். ஒரு பூத் கமிட்டிக்கு, 30 சதவீதம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் நிர்வாகிகள், 40 சதவீதம் வரை சேர்ப்போம் என சொல்கின்றனர்.
'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக, 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். இதுவரை, 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதை சொல்லி மக்களை கவருவோம்.
என்னை போல அன்புமணி இருக்க வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சொல்லியிருப்பது, அவரது ஆசை. அதை நான் ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. அவர் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். இவ்வாறு முதல்வர் கூறினார்.
கூடுதல் கட்சிகள் எவை?
தி.மு.க., கூட்டணியில், கூடுதல் கட்சிகள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதால், அது எந்தெந்த கட்சி என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் எழுந்து உள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள், இன்னும் அதிகாரப்பூர்வமாக சேரவில்லை. பா.ம.க.,வில் ராமதாஸ் அணி தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும், அன்புமணி அணி தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவாகவும் இருப்பதாக தெரிகிறது.
ராமதாஸ் அணியும், தே.மு.தி.க.,வும் தி.மு.க., கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.