விவசாயிகளுக்கு தனி குறியீட்டு எண் விபரம் தர மறுப்பதால் புதிய சிக்கல்
விவசாயிகளுக்கு தனி குறியீட்டு எண் விபரம் தர மறுப்பதால் புதிய சிக்கல்
ADDED : பிப் 12, 2025 12:50 AM
திருப்பூர்,:விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்தின் கீழ், தங்கள் நில உடமை சார்ந்த விபரங்களை வழங்க, விவசாயிகள் தயக்கம் காட்டுவதால், திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்
வேளாண்மை உழவர் நலத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு துறை, வருவாய் துறை மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்கள், விவசாயிகள் நலன் சார்ந்தே உள்ளன.
இத்துறைகளின் பலன் அனைத்தும், விவசாயிகளுக்கு, ஒற்றைச்சாளர முறையில் எளிதாக சென்று சேரும் வகையில், 'வேளாண் அடுக்கு திட்டம்' என்ற திட்டத்தை, வேளாண் துறை உருவாக்கியது.
இதில், விவசாயிகள் இணைய, ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களுடன், நில உரிமை ஆவணங்களையும் வேளாண் துறையினரிடம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக, விவசாயிகளுக்கு அனைத்து துறைகளின் சேவைகளும் தடையின்றி கிடைக்க செய்யும் வகையில், ஒவ்வொரு விவசாயிக்கும் பிரத்யேக குறியீட்டு எண் வழங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பான சிறப்பு முகாம் கிராமம் தோறும் நடந்து வருகிறது. ஆனால், இத்திட்டத்தில் விவசாயிகள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, அதிகளவில் நிலம் வைத்துள்ளவர்கள் மற்றும் வீட்டுமனையாக மாற்றும் எண்ணத்தில் விவசாய நிலம் வைத்துள்ளவர்கள், தங்கள் நில விபரங்களை வழங்க தயக்கம் காட்டுகின்றனர்.
விழிப்புணர்வு
வேளாண் துறையினர் கூறியதாவது:
இந்த திட்டத்தில் விபரங்களை தாக்கல் செய்வதால் தங்களுக்கு என்ன பயன் என்பது பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியவில்லை; இதனால், அவர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். விவசாய நில உரிமையாளர்கள், வெவ்வேறு பகுதியில் இருப்பதால், அவர்களை தொடர்பு கொண்டு, விபரங்களை சேகரிப்பதில் சிக்கல் உள்ளது.
பல விவசாயிகள், இறந்து போன தங்கள் முன்னோர் பெயரிலேயே நிலத்தின் பட்டா, சிட்டா நகல்களை வைத்துள்ளனர்.
விவசாய நில விவரங்கள் அரசின் வசம் செல்லும் நிலையில், நீர்நிலை உள்ளிட்ட அரசு நிலங்களை ஆக்கிரமித்து, விவசாய நிலமாக பயன்படுத்தி வரும் நிலையில், அவற்றை அரசு மீட்டெடுத்து விடும் என்ற அச்சம், சில விவசாயிகள் மத்தியில் உள்ளது.
இதுபோன்ற பல காரணங்கள் உள்ளன. அதேநேரம், விபரங்களை தாக்கல் செய்யாத விவசாயிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.