புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் வரிசை எண் அடிப்படையில் ஒப்புதல்
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் வரிசை எண் அடிப்படையில் ஒப்புதல்
ADDED : ஜூன் 26, 2026 01:31 AM
சென்னை: புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் முறைகேடை தடுக்க, வரிசை எண்ணுக்கு ஏற்ப, விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வசதியை, உணவுத் துறை உருவாக்க உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில், உணவு பொருட்கள் வாங்கவும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவும் ரேஷன் கார்டு அவசியம்.
தனி சமையல் அறையுடன் வசிப்போர், பொது வினியோக திட்ட இணையதளத்தில், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதை, சம்பந்தப்பட்ட உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் பரிசீலித்து, கார்டு வழங்க நடவடிக்கை எடுப்பர்.
ஒவ்வொரு அலுவலகத்திலும், மாதம் சராசரியாக, 100 முதல் 200 விண்ணப்பங்கள் வருகின்றன.
சில அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், விரைவாக கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
இதற்கு, அரசியல் பின்புலம் உள்ளவர்களின் சிபாரிசு, லஞ்சம் முக்கிய காரணங்களாக உள்ளன.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
லஞ்சம் தருவோருக்கு ரேஷன் கார்டு வழங்க, முன்னுரிமை அளிப்பதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, பாரபட்சமின்றி ரேஷன் கார்டுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை உருவாக்கப்பட உள்ளது.
அதன்படி, ஒரு அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்களில், வரிசை எண்ணுக்கு ஏற்ப மட்டுமே, ஒவ்வொரு விண்ணப்பமாக, ஒப்புதல் அளிக்கும் வகையில், மென்பொருள் உருவாக்கப்படும்.
இதனால், ஒரு விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே, அடுத்த விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சேவையை விரைவில் செயல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
