ADDED : டிச 09, 2025 08:04 AM

சென்னை : 'ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ள நிலையில், புதிய கார்டுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், எங்களுக்கு விரைவாக கார்டு வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் மகளிருக்கு வழங்கப்படும், மாதம், 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற, பலர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
தனி சமையல் அறையுடன் கூடிய முகவரி சான்று, திருமணப் பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவருக்கு, ஒரு மாதத்திற்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். ஆனால், விண்ணப்பம் செய்த பலருக்கு, கார்டு வழங்கப்படாமல் தாமதம் செய்யப்படுகிறது.
பொங்கலை முன்னிட்டு, 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே, கார்டை விரைவாக வழங்க வேண்டும் என, அரசுக்கு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய ரேஷன் கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில், 1.07 லட்சம் விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
'தகுதியான 55,000 பேருக்கு, ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்; மற்றவர்களுக்கு இம்மாத இறுதிக்குள், கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

