நெடுஞ்சாலை அருகே கிரஷர் அமைக்க தடை புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
நெடுஞ்சாலை அருகே கிரஷர் அமைக்க தடை புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ADDED : மே 09, 2025 12:56 AM
சென்னை:'தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதிகளில், கருங்கல் உடைக்கும் கிரஷர்கள் அமைக்கக்கூடாது' என்பது உட்பட, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கட்டுமான பணிக்கு தேவையான கருங்கல் ஜல்லிகளுக்காக, தனியார் நிலங்களில் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வகையில், 3,000க்கும் மேற்பட்ட குவாரிகள் உரிமம் பெற்று செயல்படுகின்றன.
இவற்றில் வெட்டி எடுக்கப்படும் கருங்கல் கற்களை ஜல்லிகளாக மாற்ற, கிரஷர்கள் எனப்படும் கல்லுடைக்கும் ஆலைகள் அமைக்கப்படுகின்றன.
தமிழகத்தில், பெரும்பாலான இடங்களில், ஆட்சேபகரமான இடங்களில் கிரஷர்கள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து, கிரஷர்களுக்கான கட்டுப்பாடுகளை வரையறுக்கும் பணியில், தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஈடுபட்டது.
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை, பல்வேறு சமயங்களில், கிரஷர்கள் அமைக்கும் பகுதி தொடர்பாக, கட்டுப்பாடுகளை பரிந்துரைத்துள்ளன.
அவற்றை பின்பற்றி, பொது கலந்தாய்வு கூட்டம், கிரஷர் உரிமையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, பெறப்பட்ட கருத்துகள், பிற துறை அதிகாரிகளின் ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில், புதிய விதிமுறைகளை, மாசு கட்டுப்பாடு வாரியம் உருவாக்கியது. அவை தற்போது வெளியிடப்பட்டுள்ளன; அதில் கூறியிருப்பதாவது:
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீட்டருக்கு அப்பால் மட்டுமே, கிரஷர்கள் அமைய வேண்டும்
காலி நிலம், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் வந்து செல்லும் அரசு அலுவலகங்கள், மத வழிபாட்டு இடங்கள் போன்றவற்றில் இருந்தும், 500 மீட்டருக்கு அப்பால் மட்டுமே, கிரஷர்கள் அனுமதிக்கப்படும்
ஏற்கனவே செயல்படும் கிரஷர்களை விரிவாக்கம் செய்யும் போது, அதன் எல்லை, காப்புக் காடுகள், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இருந்து, 500 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும்
கிரஷர்கள் விரிவாக்கத்தின் போது, காற்றின் தரம் மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
கிரஷர்கள் அதன் மொத்த உற்பத்தி திறனில், 100 சதவீதம் அளவுக்கு, ஒரு முறை மட்டுமே விரிவாக்கத்துக்கு அனுமதிக்கப்படும்
உள்ளாட்சி மற்றும் உரிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்பு மனைகள், 'காலி நிலம்' என்ற தலைப்பிடப்பட்டு, அதன், 500 மீட்டர் சுற்றளவுக்குள் கிரஷர்கள் அனுமதிக்கப்படாது
ஒரு கிரஷரில் இருந்து, 1 கி.மீ., தொலைவுக்குள் புதிய கிரஷர் நிறுவக்கூடாது என்ற கட்டுப்பாடு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும், அருகருகே கிரஷர்களை நிறுவ வேண்டாம்
துாசி அதிகம் ஏற்படும் பொருட்களை கையாளும் போது, தேசிய உற்பத்தி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்
கிரஷர் வளாகங்களில், கொட்டகை அமைப்பதில், ஜி.ஐ., ஷீட்களை பயன்படுத்தலாம், அந்த அமைப்புகள் கடுமையான காற்றை தாங்கி நிற்கும் வகையில் அமைய வேண்டும்
கிரஷர் வளாகங்களில், காலி நிலங்கள் இருந்தால், அதில், புங்கன், பூவரசு, அரசு, வேம்பு உள்ளிட்ட வகை மரங்களை நடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.