நம் பொருட்களை ஏற்றுமதி செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு புது 'ரூட்!'
நம் பொருட்களை ஏற்றுமதி செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு புது 'ரூட்!'
ADDED : டிச 21, 2024 10:50 PM
சென்னை:தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், ஈரோடு கூட்டுறவு விற்பனை சங்கம், திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனை சங்கம், செங்கல்பட்டு கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளிட்டவை, மஞ்சள் துாள், மசாலா துாள், மாவு பொருட்கள், சமையல் எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன.
அவை, கூட்டுறவு அங்காடிகளில் விற்கப்படுகின்றன.
கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகளை வெளி நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது.
இதற்காக ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல், வியாபாரம் செய்யும் கூட்டுறவு சங்கங்கள், தேசிய ஏற்றுமதி கூட்டுறவு அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
இந்த அமைப்பு, எந்தெந்த நாடுகளில், என்னென்ன பொருட்களுக்கு தேவை உள்ளது என்ற விபரத்துடன், அதை ஏற்றுமதி செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்.
அதற்கு ஏற்ப, தமிழக சங்கங்களின் மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் போன்றவற்றை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.