இ.கம்யூ., கட்சிக்கு புதிய மாநில செயலர் 18ல் தேர்வு
இ.கம்யூ., கட்சிக்கு புதிய மாநில செயலர் 18ல் தேர்வு
ADDED : ஆக 16, 2025 04:04 AM
சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, புதிய மாநிலச் செயலர், ஆக.18ல் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு, சேலத்தில் நேற்று துவங்கியது. கட்சியின் தேசிய பொதுச்செயலர்டி.ராஜா, மாநிலச் செயலர் முத்தரசன் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளான இன்றைய நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
வி.சி., தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.
நான்கு நாட்கள் நடக்கும் மாநாட்டில், நிறைவு நாளான, 18ம் தேதி மாநிலச் செயலர் தேர்தல் நடக்க உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்.
கட்சி விதிகளின்படி, ஒருவர் மூன்று முறை மட்டுமே தலைவராக இருக்க முடியும்.
தற்போது மாநில செயலராக இருக்கும் முத்தரசன், 2015, 2018, 2022 என தொடர்ந்து மூன்று முறை மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொரோனா காரணமாக, 2021ல் நடக்க வேண்டிய மாநிலச் செயலர் தேர்தல், 2022ல் நடந்தது.
இதனால், கடந்த 10 ஆண்டுகளாக முத்தரசன் பதவி வகித்து வருகிறார். புதிய மாநிலச் செயலர் தேர்தல், வரும் 18ம் தேதி நடக்கிறது.
இப்பதவிக்கு, எம்.பி.,க் கள் சுப்பராயன், செல்வராஜ், மாநில துணை செயலர் வீரபாண்டியன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, 'கடந்த 2015ல் தா.பாண்டியன் பதவி காலம் முடிந்தபோது, சி.மகேந்திரன்தான் மாநிலச் செயலர் என, அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.
'ஆனால், கடைசி நிமிடத்தில், முத்தரசனை தா.பாண்டியன் முன் மொழிந்தார். இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் மகேந்திரன் தோல்வி அடைந்தார். அதுபோல் இப்போதும் நடக்கலாம். முத்தரசன் மனதில் இருப்பவரே, மாநிலச் செயலராக வருவார்'என்றனர்.

