10 இடங்களில் புதிய சார் - பதிவாளர் அலுவலகங்கள்: எல்லை சீரமைப்பு பணியில் பதிவுத்துறை தீவிரம்
10 இடங்களில் புதிய சார் - பதிவாளர் அலுவலகங்கள்: எல்லை சீரமைப்பு பணியில் பதிவுத்துறை தீவிரம்
ADDED : மார் 31, 2025 12:38 AM

சென்னை: தமிழகத்தில், 10 இடங்களில், புதிதாக சார் - பதிவாளர் அலுவலகங்கள் துவக்க, எல்லை சீரமைப்பு பணியில் பதிவுத்துறை ஈடுபட்டுள்ளது.
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், அதற்கான கிரைய பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு, சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு வருகின்றனர்.
தற்போது, தமிழகம் முழுதும், 585 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றுக்கு தினமும், 15,000 முதல், 20,000 பேர் வரை வந்து செல்கின்றனர்.
நெரிசல் பிரச்னை
சில பகுதிகளில், மக்கள் குடியேற்றம் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்றவற்றால், அதிக பத்திரங்கள் பதிவுக்கு வருகின்றன.
இதைச் சமாளிக்க, அப்பகுதியில் உள்ள அலுவலகங்களில், இரு சார் - பதிவாளர்கள் நியமிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனினும், கூட்ட நெரிசல் பிரச்னை பெரிதாக உள்ளது.
இந்நிலையில், வருவாய் துறையில் பின்பற்றப்படும் தாலுகா எல்லைகளுக்கும், பதிவுத்துறையின் சார் - பதிவாளர் அலுவலக எல்லைக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் பத்திரப்பதிவு முடிந்து, பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் வைத்து, தாலுகா எல்லைக்கு இணையாக, சார் - பதிவாளர் அலுவலக எல்லையை வரையறை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களை, இரண்டாக பிரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் சில பெரிய சார் - பதிவாளர் அலுவலகங்களை பிரிக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
விரிவான அறிக்கை
இதுகுறித்து பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும், ஒரே சார் - பதிவாளர் அலுவலகத்துக்குள் வர வேண்டும். இதற்காக, சார் - பதிவாளர் அலுவலர்கள் வாயிலாக விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன.
அதன் அடிப்படையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, சேலம் போன்ற நகரங்களில், அதிக பத்திரங்கள் வரும், சார் - பதிவாளர் அலுவலகங்களை பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர், திருப்போரூர் உட்பட 10 இடங்களில், புதிதாக அலுவலகங்கள் துவக்கப்பட உள்ளன. புதிய அலுவலகங்களுக்கான எல்லை சீரமைப்பு பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன. விரைவில், இது தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.