ADDED : ஆக 30, 2025 06:32 AM
சென்னை : தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல், நெல் கொள்முதல் சீசன் துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.
இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாக கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
நடப்பு கொள்முதல் சீசன், வரும் 1ம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும், 100 கிலோ எடை உடைய குவின்டால் சன்ன ரக நெல்லுக்கு, 2,545 ரூபாய், பொது ரக நெல்லுக்கு, 2,500 ரூபாய், குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சன்ன ரக நெல்லுக்கான ஆதார விலையில், மத்திய அரசு, 2,389 ரூபாய், தமிழக அரசு ஊக்கத் தொகையாக, 156 ரூபாய் வழங்குகிறது. பொது ரக நெல்லுக்கு மத்திய அரசு, 2,369 ரூபாய், தமிழக அரசு 131 ரூபாய் வழங்குகிறது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.