'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமிக்கு 'கள் இயக்கம்' நல்லசாமி சவால்
'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமிக்கு 'கள் இயக்கம்' நல்லசாமி சவால்
ADDED : ஜூன் 14, 2025 03:15 AM

திருப்பூர் : கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அளித்த பேட்டி:
அடுத்தாண்டு நடத்தப்பட உள்ள சட்டசபை தேர்தலில் கள்ளுக்கான தடை, தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். 'கள், கொடிய விஷத்தன்மை நிறைந்தது; அதில் எந்த சத்தும் இல்லை' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கள் விஷத்தன்மை நிறைந்தது; உள்நாட்டு மதுபானங்கள் தான் உடலுக்கு நல்லது என்பதை அவர்கள் நிரூபித்தால், 10 கோடி ரூபாய் பரிசு தர தயாராக உள்ளோம். கள்ளுக்கு ஆதரவான எங்களின் நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்கிறோம்.
வரும் டிச., மாதம், திருச்சியில் கள் விடுதலை மதுவிலக்கு மாநாடு நடத்த உள்ளோம்.
சிறப்பு அழைப்பாளராக, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை அழைக்க உள்ளோம்.
பீஹாரில், கடந்த, 9 ஆண்டுக்கு முன், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
அந்த மாநிலத்தின், குற்ற ஆவண பதிவின் படி, பீஹாரில் மது விலக்கு கொண்டு வரப்பட்ட தினத்திலிருந்து, சாலை விபத்து, குற்றங்கள் வெகுவாக குறைந்திருக்கிறது.
குடும்பங்களில் அமைதி நிலவுகிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அங்கும், கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டன; ஆனால், அம்மாநில அரசு, நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.
இதையெல்லாம் தான் கள் விடுதலை மாநாட்டில் விரிவாக பேசவிருக்கிறோம். எனவே, இந்த மாநாடு, அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.