ஆட்சியாளர்கள் தவறை மூடி மறைக்க முடியாது கரூர் விவகாரத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கருத்து
ஆட்சியாளர்கள் தவறை மூடி மறைக்க முடியாது கரூர் விவகாரத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கருத்து
ADDED : அக் 02, 2025 01:38 AM

கோவை: 'கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் ஆட்சியாளர்களின் தவறுகளை மூடி மறைத்து புனிதப்படுத்த முடியாது' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
த.வெ.க., தலைவர் விஜயின், கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட, 41 பேர் உயிரிழப்பு சம்பவத்தையும், 1999ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மனித உரிமை மீட்புக்கான போராட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை உட்பட, 17 பேர் உயிரிழந்த சம்பவத்தையும், ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.
எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி நடந்த அந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட, 627 தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகம் நோக்கி கிளம்பிய பேரணி, இரண்டு மணி நேரம் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் கலெக்டர் அலுவலகம் வந்தது.
துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்ததோடு, கலைந்து சென்றவர்கள் தாமிரபரணி ஆற்றில் நீந்தி, மறுகரைக்கு செல்லவிடாமல், போலீசார் லத்தியால் அழுத்தியே, 17 பேர் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டனர்.
அன்றைய முதல்வர் கருணாநிதி, எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து இருந்தால், அந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. தற்போது, கரூர் வரும் அரசியல் கட்சி தலைவர்களில் பலரும் கூட்டணி பாசத்தோடும், ஆளுங்கட்சியை நெருங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும் கருத்து தெரிவித்து செல்கின்றனர்.
கரூரில் விஜய் தனது பரப்புரையில், உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர் உட்பட ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு பேச ஒதுக்கப்பட்ட இடம் சரியானது தானா? போலீசார் நடுநிலையோடு நடந்து கொண்டனரா? தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன? போன்றவற்றுக்கு விடை கிடைக்க வேண்டும்.
இதுபோன்ற கேள்விகளை, தமிழக அரசை நோக்கி எழுப்ப வேண்டிய அரசியல் கட்சிகள் மெழுகு பூசி, அனைத்து அம்புகளையும் விஜய் மீது பாய்ச்சுகின்றனர். ஆட்சியாளர்களின் தவறுகளை மூடி மறைத்து, புனிதப்படுத்த முடியாது; கூடாது. 1999க்கும், 2025க்கும், 26 ஆண்டுகள் மட்டுமே வித்தியாசம். ஆனால், ஆட்சியாளர்களின் அணுகுமுறை ஒன்றே.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.