மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கு புது இணையதளம்
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கு புது இணையதளம்
ADDED : மார் 15, 2026 02:11 AM
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் மற்றும் நலத் திட்டங்களை கண்காணிக்க, 'சமூக பாதுகாப்பு வழங்கல் அமைப்பு' என்ற இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக, உலக வங்கி நிதி உதவியுடன், 'உரிமைகள் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கோட்ட மற்றும் வட்டார அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான, ஒருங்கிணைந்த சேவை மையங்கள் நிறுவப்பட்டு உள்ளன.
மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறிவது, இத்திட்டத்தின் நோக்கம். அதற்கான களப் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுதும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், மறுவாழ்வு சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் சேவை மையங்களை கண்காணிக்கும் வகையில், 'சமூக பாதுகாப்பு வழங்கல் அமைப்பு' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான சேவைகள் வழங்கப்படுவதோடு, பணிகளின் நிலை குறித்து, தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த இணையதளத்தை, தலைமைச் செயலர் முருகானந்தம் துவக்கி வைத்தார்.

