ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்! பைக் ரேஸ் நடத்திய வாலிபர்களின் 242 பைக் பறிமுதல்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்! பைக் ரேஸ் நடத்திய வாலிபர்களின் 242 பைக் பறிமுதல்
ADDED : ஜன 01, 2025 03:37 PM

சென்னை; சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரேசில் ஈடுபட்ட 242 வாலிபர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நாளில், நள்ளிரவில் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசங்களில் ஈடுபடக்கூடாது என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. தலைநகரின் பல பகுதிகளில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
மதுபோதையில் வாகனம் இயக்குதல், வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பொதுமக்களை அச்சுறுத்தவது போன்ற செயல்களை செய்வோரை பிடிக்கும் விதமாக 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி முக்கிய பகுதிகளில் ரேசில் ஈடுபட்ட வகையில் 242 வாலிபர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில், அபராதம் விதிக்காமல் உரிய முறையில் எச்சரித்து, அதன் உரிமையாளர்களிடமே வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

