புதிதாக துவங்கிய கட்சி அமாவாசையை தாண்டாது: விஜயை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி
புதிதாக துவங்கிய கட்சி அமாவாசையை தாண்டாது: விஜயை மறைமுகமாக சாடிய ஆர்.எஸ்.பாரதி
ADDED : ஆக 27, 2024 02:16 AM

நாகப்பட்டினம்: ''புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., ஆகிவிட முடியாது,'' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
நாகையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 1,600 பேர் தி.மு.க.,வில் நேற்று இணைந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாரதி பேசியதாவது:
சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பு வந்துள்ளது. அதில், முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில், 71 சதவீதம் செல்வாக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 54 சதவீதம் முழு திருப்தி, 17 சதவீதம் ஓரளவுக்கு திருப்தி என்று சொல்லப்பட்டுள்ளது. 29 சதவீத பேர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிருப்தியும் கூட முதல்வர் மீது அல்ல.
கட்சி நிர்வாகிகள் மீதே. அந்த 29 சதவீதத்தை சரி செய்து விட்டால் போதும், எந்த கொம்பனாலும் தி.மு.க.,வை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்டிருக்கும் கட்சி, அமாவாசையைக்கூட தாண்டாது. ஏற்கனவே இருக்கும் கட்சியைப் பார்த்து, புது கட்சி துவக்குவது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல உள்ளது.
கட்சி துவக்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர்., ஆகி விட முடியாது. தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்து சென்றார். இருந்தாலும், அ.தி.மு.க.,வுக்கும் தி.மு.க., வுக்கும் இருப்பது பங்காளி சண்டைதான்.
நாளைக்கே கோட்டைக்கு வந்து விடலாம்; முதல்வர் ஆகி விடலாம் என நினைத்து கட்சி துவங்குகின்றனர். அவர்களை நம்பி, அந்தப் பக்கம் போன இளைஞர்கள், காலி பானை என்று தெரிந்ததும், சென்ற வேகத்தில் திரும்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

