ADDED : பிப் 07, 2024 07:56 AM

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்படி அடுத்த உதயேந்திரத்தை சேர்ந்தவர் அருண்குமார், 35; இவர் சென்னையில் பணியாற்றி வந்தார். பள்ளிப்பட்டை சேர்ந்தவர் தேன்மொழி, 31; இருவருக்கும் கடந்த, 6 மாதங்களுக்கு முன் திருமணமானது.
இந்நிலையில், கருத்து வேறுபாடால் கடந்த, 10 நாட்களுக்கு முன், தேன்மொழியை பள்ளிப்பட்டிலுள்ள அவரது தாய் வீட்டில் விட்டு, சென்னைக்கு சென்றார். இருவரும் மொபைல்போனில் பேசி வந்த நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த தேன்மொழி, நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு கொண்டார். அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு உயிரிழந்தார். வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரித்தனர்.
மனைவி தற்கொலை செய்ததை அறிந்த அருண்குமார் மனமுடைந்து, நேற்று காலை, அவர் தங்கியுள்ள, சென்னை கே.கே.நகரிலிலுள்ள வீட்டில், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அசோக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆசிரியர், ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவியிடம் ரெக்கார்ட் நோட் எழுதி வரவில்லை எனக் கூறி உயிரியல் ஆசிரியர் ஜெயராஜ் பிரம்பால் அடித்துள்ளார். பின்னர் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார். ஜெயராஜை போக்சோ வழக்கில் செங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
* திருநெல்வேலி அடுத்த ஆரோக்கிய நாதபுரத்தை சேர்ந்தவர் விமல் அருளப்பன் 30. ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் , இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விமல் அருளப்பனை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
உதவி செய்வதாக இளம்பெண் கழுத்தறுத்த வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை அலங்கார மடத்தைச் சேர்ந்த 28 வயது பெண் சமீபத்தில் வாஷிங் மெஷின் வாங்கினார். இதை சரியாக இயக்கத் தெரியாததால் அக்கம் பக்கத்தினரிடம் அவர் உதவிகேட்டபோது அதே பகுதி எம். எஸ்சி. பட்டதாரி நிஷாந்த் 25, தனக்கு அதுகுறித்து தெரியும் எனக்கூறியுள்ளார்.
வீட்டிற்கு வந்தவர் திடீரென பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து சோபாவில் தள்ளிவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டு நிஷாந்தை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட முயற்சித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த நிஷாந்த் கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்ததில் ரத்தம் வெளியேறி அங்கேயே மயங்கினார் . அங்கிருந்தவர்கள் ஓட முயன்ற நிஷாந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அப்பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிஷாந்த் மீது கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவுகளில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
தனியார் நிறுவன டிரைவர் ரூ.82 லட்சத்துடன் ஓட்டம்
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சூப்பர்வைசர் சதீஷ்குமார், 37, உதவியாளர் கார்த்திக், 32, ஆகியோர் நேற்று அந்த நிறுவனத்தில் இருந்தது, 82 லட்ச ரூபாய் பணத்தை சாக்கு முட்டையில் கட்டி காரில் எடுத்து சென்றனர். காரை நிறுவனத்தின் டிரைவர் லட்சுமணன், 25, ஓட்டினார்.
புதுக்கோட்டை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் பிடிக்கும் போது, சூப்பர்வைசர் மற்றும் உதவியாளர் காரில் இருந்து இறங்கிய போது, டிரைவர் லட்சுமணன் காரில் இருந்த 82 லட்ச ரூபாய் பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.
இயற்கை உபாதை கழித்து காருக்கு திரும்பிய இருவரும் அதிர்ச்சி அடைந்து, திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சந்தேகத்தின்படி, அந்த டிரைவருக்கு உதவிய இருவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி, குழியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாக்கு முட்டையிலிருந்த 75 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர். அந்த இருவரையும் கைது செய்தனர்.
கான்ஸ்டபிள் கார் ஏற்றி கொலை
ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தின் சென்னாபள்ளி கிராமத்தை ஒட்டி சேஷாசலம் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு, செம்மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, வனத்துறையினர் உதவியுடன் கடத்தல் கும்பலை பிடிக்கும் நோக்கில் நேற்று, அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அந்த வழியாக வரும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அங்கு வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது, அருகில் நின்ற கான்ஸ்டபிள் கணேஷ் மீது மோதி விட்டு, அந்த கார் நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த காரை பின்தொடர்ந்து சென்று போலீசார் விரட்டி பிடித்தனர். இதில், கான்ஸ்டபிள் மீது வாகனம் ஏற்றி கொலை செய்த இருவரை கைது செய்ததுடன், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
கோவிலில் சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 30 ஆண்டு சிறை
மத்திய பிரதேசத்தில், ஏழு வயது சிறுமியை கடத்திச் சென்ற 46 வயது மதிக்கத்தக்க நபர், கோவிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இச்சம்பவம், 2018ல் நடந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். இந்த வழக்கில், அந்த நபருக்கு துாக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ம.பி., உயர் நீதிமன்றம், துாக்கு தண்டனையை ரத்து செய்து, சாகும் வரை சிறை தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அந்த நபர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிகுமார், ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பில், பாலியல் பலாத்காரம் செய்த நபரின் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

