ADDED : மார் 18, 2024 12:41 AM
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டில், 2,000 கி.மீ., சாலை மேம்பாட்டு பணிகள், 1,000 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் என, கடந்த பிப்., 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட, 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்த, தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தில் பஸ் செல்லும் சாலைகள், 3 கி.மீ., நீளத்திற்கு அதிகம் உள்ள சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, இதர மாவட்ட சாலைகள், புறவழிச்சாலை ஆகியவற்றை இணைக்கும் சாலைகள், சுற்றுலா தலம், பாரம்பரிய இடங்கள் போன்றவற்றை இணைக்கும் சாலைகள் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் 2024 - 25ம் நிதியாண்டில், ஒரு லட்சம் புதிய வீடுகள், ஒவ்வொன்றும், 3.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். இப்புதிய திட்டம், 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற பெயரில், வரும் நிதியாண்டில், 3,500 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் நிதியாண்டில், ஒரு லட்சம் புதிய வீடுகளை, 3,100 கோடி ரூபாயில் கட்ட தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. நிர்வாக செலவுக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் துாய்மை பாரதம் இயக்க திட்டத்தை இணைத்து செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
சட்டசபையில் பிப்., 15ம் தேதி, முதல்வர் பேசுகையில், 'தமிழகத்தில் 2001ம் ஆண்டுக்கு முன்பாக, பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், 2.50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. கிராமப்புற விளிம்பு நிலை மக்களுக்காக கட்டப்பட்ட அந்த வீடுகள், 2,000 கோடி ரூபாயில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுது பார்த்து புனரமைக்கப்படும்' என்று அறிவித்தார். அதன்படி, 2.57 லட்சம் வீடுகளை, 1954.20 கோடி ரூபாயில் புனரமைக்க, தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. வரும் நிதியாண்டில் 1,48,634 வீடுகளை, 1041.32 கோடி ரூபாயில் புனரமைக்கவும், தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது, ஏப்.,1 முதல் செயல்பாட்டிற்கு வரும்.

