'ஸ்மார்ட் சிட்டி'க்கு புதிய அறிவிப்புகள் இல்லை?:கட்டுமான நிறுவனங்கள் ஏமாற்றம்
'ஸ்மார்ட் சிட்டி'க்கு புதிய அறிவிப்புகள் இல்லை?:கட்டுமான நிறுவனங்கள் ஏமாற்றம்
ADDED : மார் 02, 2015 03:52 AM

நாடு முழுவதும், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் உருவாக்கும் திட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக கட்டுமான நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
அதி நவீன நகர்ப்புற வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும், 'ஸ்மார்ட் சிட்டி' கள் உருவாக்கப்படும் என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும், கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இத்திட்டம் குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதன்படி, நாடு முழுவதும், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, இதற்கான பூர்வாங்க பணிகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை துவங்கியது.
எதிர்பார்ப்பு:இதற்காக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, பல்வேறு நகரங்களில் இது தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்றார். மேலும், அனைத்து மாநில வீட்டுவசதித் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டங்களும் நடத்தப்பட்டன.இந்த கூட்டங்களில், மாநில அரசுகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், எந்தெந்த மாநிலத்தில் எத்தனை, 'ஸ்மார்ட் சிட்டி' அமைப்பது என்பது தொடர்பான கலந்தாலோசனை கூட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டன.
மத்திய பட்ஜெட்டில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், இதில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்தும் புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என, அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஏமாற்றம்:இது குறித்து கட்டுமானத்துறை வளர்ச்சி கவுன்சில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தைச் செயல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது. இத்திட்டத்தின்படி, 6 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளது. ஆனால், '100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்கப்படும்' என, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, முற்றி லும் தனியார் முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகள் எதுவும் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
ரியல் எஸ்டேட் துறைக்கு பின்னடைவா?:வரும், 2022க்குள் நகர பகுதிகளில், 2 கோடி வீடுகளும்; கிராம பகுதிகளில், 4 கோடி வீடுகளும் கட்டப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தனை வீடுகள் கட்டப்படும் போது, அவை கையடக்க விலையில் கிடைக்கக் கூடிய வீடுகளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் உள்ளன. வீடு கட்டும் திட்டம் முழுமூச்சோடு செயல்படுத்தப்பட்டால், ஆண்டுக்கு, 86 லட்சம் வீடுகள் நாடு முழுவதும் சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது. இவற்றில், ஆண்டுக்கு, 2 - 3 லட்சம் வீடுகளாவது தமிழக சந்தைக்கு வரலாம். அதனால், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளின் தேவையும், விலையும் குறைய வாய்ப்பு ஏற்படும் என, இந்த துறை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், அரசின் திட்டத்தில், தனியார் ஈடுபடுத்தப்படும் பட்சத்தில், அவர்களுக்கு அது தொழில் வாய்ப்பாகவும் மாறலாம்.
- நமது நிருபர் -
