ADDED : ஜூன் 07, 2015 03:19 AM
நம்மில் பலருக்கு நெஞ்சு எரிச்சல் தீராத உபாதையாக இருந்து வருகிறது. அதிலிருந்து தப்பிக்க இயற்கையாகவே மருந்து மாத்திரை இல்லாத பல எளிய வழிகள் உள்ளன. அவற்றை நாம் கடைப்பிடித்தால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடுவதோடு தேவையில்லாத மருத்துவ செலவையும் குறைக்க முடியும்.
1. பெரும்பாலானோர் நெஞ்சு எரிச்சலுக்காக அடிக்கடி ஆன்ட் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். உண்மையில் வயிற்றில் சுரக்கும் அமிலம் ஜீரணத்திற்கும், குடலில் என்ஜைம்கள் உருவாவதற்கும் தான் உதவுகிறது. எனவே, ஆன்ட் ஆசிட் மாத்திரைகள் இதற்கு நிரந்தர தீர்வை தர முடியாது.
2. உணவின் அளவு அதிகமாகும் போது தான் இந்த பிரச்சனை வருகிறது. வயிற்றின் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நான்கு மணி நேர இடைவெளியும், மதிய உணவுக்கும் சிற்றுண்டிக்கும் இடையே மூன்று மணி நேர இடைவெளியும், சிற்றுண்டிக்கும் இரவு உணவுக்கும் இடையே மூன்று மணி நேர இடைவெளி<யும் அவசியம்.
3. இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிவதால் வயிற்றின் இயற்கையான ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது.
4. மசாலா உணவுகளை அடிக்கடி உண்பதைத் தவிர்க்க வேண்டும். மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது ஜீரண மண்டலம் பாதிப்பு அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. காபி, டீ போன்றவற்றை ஒரே நாளில் பல முறை குடிப்பதாலும் இப்பிரச்சனை வருகிறது.
5. உணவை மெதுவாக மென்று விழுங்கினால் தான், அது எளிதில் ஜீரணம் அடையும். அவசரம் அவசரமாக உணவை மென்று விழுங்கும் போது வயிற்றிற்கு வேலை அதிகமாவதால் அதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது.
6. புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்சனை ஏற்படும் போது, அப் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும். சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.
7. தூங்கும் சமயம் தலையனை சரியான உயரத்தில் இருக்க வேண்டும். தலையனை உயரம் குறைவாக இருந்தால் வயிற்றில் உணவு அதிக நேரம் தங்கி வடும். இதைத் தவிர்க்க தலையனை உயரத்தை சற்று அதிகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது. உணவு எளிதாக கீழ் இறங்கி விரைவில் ஜீரணம் அடைவதால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

