ADDED : செப் 24, 2015 01:32 AM

பக்ரீத் பண்டிகை என்றதும், எல்லாருக்கும் நினைவுக்கு வருவது குர்பானி தான்; குர்பானி என்பதற்கு அர்த்தம், தியாகம்.'நீங்கள் இறைவழியில் குர்பானி செய்த போதிலும், அதன் மாமிசமோ அல்லது ரத்தமோ இறைவனை அடைவதில்லை; உங்களுடைய இறையச்சம் தான் அவனை அடையும்' என்று, குர்ஆன் தெளிவாக கூறுகிறது.இதிலிருந்தே, இறைவனுக்கு பிடித்தது இறையச்சம் என்பது உறுதியாக தெரிகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறையச்சம் மட்டும் இருந்து விட்டால், அவன் தானாகவே தீய வழியில் செல்வதிலிருந்து விலகி விடுவான். மது அருந்துவது, விபசாரம் செய்வது, வட்டி வாங்குவது என, இது மட்டுமா தீய செயல்கள்; மனதில் கபடங்களை வைத்து கொண்டு, நாவில் தேன் ஒழுக பேசி மற்றவர்களை ஏமாற்றுவது, துரோகம் செய்வது, தன்னுடைய முன்னேற்றம் ஒன்றே குறியாக கொண்டு சுயநலமாக வாழ்வது, மற்றவர்களின் வறுமையை அகற்றும் வழிமுறைகளை காட்டாமல், இறைவன் உனக்கு விதித்தது
இவ்வளவு தான் என்று, ஏழைகளுக்கு ஆறுதல் சொல்வது பாவம் அல்லவா! இறையச்சம்உள்ளவர்கள் இப்படி செய்வார்களா என்று, தியாகத் திருநாளான இன்று சற்று யோசித்து பார்க்க வேண்டும். நம்மிடமிருக்கும் இதுபோன்ற தீய குணங்களை முதலில் தியாகம் செய்ய முடிவு செய்து, அதை இந்த நல்ல நாளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இறைத்துாதர் முஹம்மத் நபி (ஸல்), அதைத் தான் செய்தார். மக்களிடைய மறுமையை பற்றி மட்டும் அவர் போதிக்கவில்லை. இந்த உலக மக்கள் வாழ்க்கை நல்ல விதமாக அமைய ஆலோசனைகளை தந்தார்; அவர்களுக்கு அதில் வழிகாட்டினார்.
இப்படிப்பட்ட மிகச்சிறந்த நாளான இன்று, ஜகாத் கொடுக்க தகுதியான முஸ்லிம்களுக்கு குர்பானி வாஜிபு கடமை. பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு பின், குர்பானி கொடுக்க வேண்டும்.
குர்பானி இறைச்சியை மூன்று சமமான பங்காக பிரிக்க வேண்டும்; அதில் ஒரு பங்கை தம் குடும்பத்திற்கும், இன்னொரு பங்கை உறவினர்களுக்கும், மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் இருக்கும் ஒரு உண்மையை நாம் கவனிக்க வேண்டும். நமக்காக மட்டுமல்ல, நம்முடைய உறவினர்களை பற்றியும் ஏழைகளை பற்றியும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று, இறைவன் நமக்கு கட்டளையிடுகிறான்.
இந்த செயல், ஒருநாள் செய்தால் போதுமா? இந்த வாழ்நாள் முழுக்க கடைபிடித்தால், இந்த சமூகம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்; இங்கு அமைதி நிலவும், வன்முறைக்கு நேரம் கிடைக்காது, அன்பு செலுத்தவே ஒவ்வொரு ஆத்மாவும் ஆசைப்படும், என் வழி தான் சரியானது உன் வழி தவறானது என்கிற துவேஷம் விலகும். எல்லாரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இறைவனே யாரிடமும் வித்தியாசம் காட்டாத போது நாம் எப்படி பிறர் மீதும் அநியாயம் செய்ய முடியும்.
நம்முடைய வாழ்க்கை முழுக்க இறையச்சத் தில் இருந்தால், நம்மை ஏன் யாரும் வெறுக்கப் போகின்றனர், நம்மை ஏன் யாரும் சந்தேகத்துடன் பார்க்கப் போகின்றனர்?
மற்றவர்களுக்கு முன் மாதிரியான சமூகமாக வாழ வேண்டிய நாம், நம் பொறுப்பிலிருந்துதவறினால், நாளை இறைவனுக்கு பதில் சொல்லும் பொறுப்பு உணர்வு நமக்கு இருப்பதை மறுக்க முடியுமா? இறையச்சத்துடன் நாம் வாழ்ந்தால் நம்மை கண்டு யாரும் அஞ்ச
வேண்டிய அவசியம் இல்லை. அன்பு செலுத்தினால் போதும்; அதைத் தான் இந்த தியாகத் திருநாள் நம் எல்லாருக்கும்
உணர்த்துகிறது.சையத் இக்பால் அஹ்மத்
****
எல்லைக் கோடு!
எங்கேயும்
இதை பார்க்க முடியாது.
பல நிறங்கள்
பல மொழிகள்
பல இனங்கள்
படைத்தவனின்
அழைப்பை ஏற்று
ஓரிடத்தில் கூடும்
அதிசயம்
எங்கேயும் இதை
பார்க்க முடியாது
ஏற்றத் தாழ்வு
எதுவுமில்லை
வர்க்க பேதம்
பிரிக்க வில்லை
யார் போட்டது
எல்லைக்கோடு?
எல்லாம் சும்மா
வந்து பாரு!
***
வற்றாத புனித நீர் 'ஜம் ஜம்'
மனிதர்கள் விஷயத்தில் நம்மை படைத்த (அல்லா) இறைவனுக்கு அஞ்சுங்கள்; இறைவனுடைய விஷயத்தில் யாருக்கும் அஞ்சாதீர்கள். இறைவனுடைய பிடியிலிருந்து உங்களை யாரும் காப்பாற்ற முடியாது.
ஆனால், இறைவனை நாடினால், உங்களை எல்லாருடைய பிடியிலிருந்தும் காப்பாற்ற முடியும். எவர் ஒருவர் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்கிறாரோ, அவர்கள் ஈருலகிலும் வெற்றி பெற்றவர்கள் ஆவர் என்கிற ஓரிறை கொள்கை முழக்கம், 'லா இலாஹா இல்லல்லாஹ்' வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர, வேறு எவரும் இல்லை என, ஏறத்தாழ, 4,000 ஆண்டுகளுக்கு முன் போதித்த நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தாம் கொண்ட கொள்கைகளுக்காக செல்வச் செழிப்பான வாழ்க்கையை தியாகம் செய்து, அல்லாவின் கட்டளைக்கிணங்க தன் அருமை மனைவி மற்றும் பச்சிளம் பாலகன் இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும், இன்றைய சவுதி அரேபியா பாலைவனத்தில், இரு மலைக்குன்றுகளுக்கிடையே இன்றைய, புண்ணிய பூமி 'மெக்கா' என அழைக்கப்படும் இடத்தில், தன்னந்தனியாக விட்டுச் செல்லும் போது, மனைவி தன் கணவரான இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம்
கேட்கின்றார். இந்த பாலைவனத்தில் நிழல் கூட இல்லாத இந்த இடத்தில், பருக நீர் இல்லாத இடத்தில், எங்களை ஏன் இப்படி விட்டுச் செல்கிறீர்? யாருடைய உத்தரவின் பேரில் இந்த காரியம் செய்கிறீர்கள் என வினவிய போது, இப்ராஹிம் அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் இப்படி பதிலளித்தார். இந்த உலகினைப் படைத்த இறைவன் அல்லாவின் உத்தரவு எனக் கூறி விட்டு, திரும்பிப் பார்க்காமல், சென்று விடுகின்றார்.
கையில் பச்சிளம் குழந்தை இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அணைத்தபடி அங்கும் இங்கும் அலைந்து, அருந்த எங்கும் நீர் கிடைக்குமா என, ஓடோடி பார்க்கின்றார். குழந்தையின் அழுகை அதிகமாகவே, ஓரிடத்தில் பாலைவன மணலில் தன்னுடைய மேலாடையின் மீது குழந்தையை படுக்க வைத்து விட்டு, சற்று தொலைவில் உள்ள சபா என்கிற மலைக்குன்றின் மீது ஏறி நின்று, நீர் ஏதும் தென்படுகிறதா என பார்த்து, தன்னை படைத்த இறைவனை இறைஞ்சிய வண்ணம் மறுமுனையில் உள்ள மர்வா என்கிற மலையின் உச்சிக்கு சென்று, ஏதும் தென்படுகிறதா என பார்த்து, அங்கிருந்து மீண்டும் தம்முடைய சிறு பாலகனை பார்த்த வண்ணம் மீண்டும் சபா மலைக்குன்றின் மீது ஏறிப் பார்க்கின்றார்.
இப்படி இரு குன்றுகளுக்கிடையே, 7 முறை ஓடோடிப் பார்க்கின்றார். பச்சிளம் குழந்தையோ பசியாலும், தாகத்தாலும், அழுது கொண்டே கை, கால்களை உதற, அதன் குதிகால்கள் பாலைவன மண்ணில் பட்டு, அந்த இடத்தில் சிறு ஊற்று நீர் புறப்பட்டு, குழந்தையின் நாற்புறத்திலும் சேர்ந்து விடுகிறது.
இதை கண்ட தாய் ஹாஜிரா (அலைஹிஸ்ஸலாம்) ஓடோடி வந்து குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு நீர் ஊற்றை, 'ஜம் ஜம்' அரபு மொழியில் சேர்ந்து விடு எனப் பொருள். அதை சுற்றி மண்ணை சேர்த்து, அதை சிறிய கிணறு போல் செய்து, தானும் தன் பிஞ்சு குழந்தைக்கும் தாகம் தீர்க்க அருந்தி, அந்த பாலைவன பிரதேசத்தில் மெக்கா எனக் கூறப்படும் அல்லாஹ்வின் ஆலயம் காபா என கூறப்படும் இடத்தில், காலம் கழிக்கின்றனர். அந்த புண்ணிய நீர் இன்று வரை வற்றாமல், குறையாமல் வருகின்ற, லட்சக்கணக்கான ஹாஜிகளுக்கும், உலகத்தில் உள்ள நம்பிக்கையாளர்களுக்கும் கொடையாக இந்த, 'ஜம் ஜம்' நீர் கிடைக்கிறது.
அதிசயம் அல்லவா! இந்த நீர் அருந்தும்போதும் ஒவ்வொரு ஹாஜியும் தம்முடைய கல்வி அறிவிற்கும், உடல் ஆரோக்கியத்துக்கும், ஈருலக வெற்றிக்கும் துணை புரிய துவா கேட்டு அருந்துவது சாலச் சிறந்தது.
சையத் அதாவுர் ரஹ்மான்
***
தியாகம் முதல் தியாகம் வரை!
இஸ்லாமிய துவக்கமான முஹர்ரம் மாதமும். இறுதி மாதமான, துல்ஹஜ் மாதமும் மாபெரும் தியாகங்களை உள்ளடக்கிய மாதங்களாகும்.
தியாகத்தின் தழும்புகளை இன்றும் நெஞ்சில் நினைவுகளால் சுமந்து, தியாகத்தின் துயரங்களை இன்றும் மனம் கலங்க நினைத்து பார்க்கும் சமயம்.
தியாகத்தில் ஆரம்பமாகும் இஸ்லாமிய வரலாறு தியாகத்திலேயே முடிகிறது.அப்படி இப்ராஹிம் நபி(அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும், இன்றைய நாளை உலகம் முழுக்க இருக்கும் அத்தனை முஸ்லிம்களும் கடைபிடிக்கின்றனர். அதை ஒரு பண்டிகையாக
கொண்டாடுகின்றனர்.இப்ராஹிம் நபிக்கு, ஸாரா மற்றும் ஹாஜிரா என, இரண்டு மனைவியர் இருந்தனர். அவருக்கு நீண்டநாள் வரை, குழந்தை பாக்கியம்
இல்லாமல் இருந்தது. அவருக்கு, 85 வயது இருக்கும்போது, ஹாஜிராமூலமாக ஒரு பிள்ளை பிறந்தது.அவருடைய பெயர் இஸ்மாயில் நபி.அதற்கு பின் சில ஆண்டுகள் கழித்து, ஸாரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவருடைய பெயர் இஸ்ஹாக் நபி.
''கருணைமிக்க ரஹ்மானாகிய அல்லாஹ், ஒருமுறை நபி இப்ராஹிம்(அலை) உடைய கனவில் தோன்றி, உம்முடைய மகன் இஸ்மாயிலை என் பெயரால் அறுத்து பலி இடு,'' என்று கட்டளையிட்டார்.
இறைத்துாதர்களுக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல; அவை கடவுளின் கடிதங்கள். உலகத்தையே படைத்து பரிபாலிக்கும் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற, இப்ராஹிம் நபி (அலை) தன் கனவை பற்றி தன்னுடைய மகன் இஸ்மாயிலிடம் கூறுகிறார்.
''இறைவன் சொன்னதையே செய்யுங்கள்...'' என்கிறார் மகன்.என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்...பின், இப்ராஹிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக்கொண்டு, மினா எனும் மலையடிவாரத்தில், பிள்ளைப்பாசம் தடுக்காமலிருக்க, தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டு. மகனது கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, அல்லாஹ் மிகப்பெரியவன் என கூறியதும், மகன் விலகியிருந்த காட்சியையும், அங்கு ஒரு கொழுத்த ஆடு இருப்பதையும் காண்கிறார்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே... அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே... அவனை தவிர வணக்கத்துக்குரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி, என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார், இப்ராஹிம் நபி. இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்) இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள், ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து வாருங்கள்,'' என்று சொன்னார்.
இந்த உலக வாழ்க்கையை இறைவன் எந்த ஒரு அர்த்தமும் இல்லாமல் வெறுமனே படைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
நமக்கு சிந்திக்கின்ற ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கிறான். இறைவனுடைய படைப்பிலேயே ஆக சிறந்த படைப்பு மனிதன் தான். ஆனால், படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே நாம் பரிகாசம் செய்வது போலாகும்.
நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். நம் மனதில் மறைந்து கிடக்கும் நானே மேலானவன் என்கிற மமதையை, மாடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். செல்வம், அகம்பாவம், ஆடம்பரம் இவற்றின் ஆணவ கூடுகளை ஒட்டகங்களுடன் சேர்த்து, இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.
இத்தியாகத் திருநாளில் எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம்... இவ்வுலகை படைத்து பரிபாலிப்பவனே... அளவற்ற அருள் பொழிபவனே... நிகரற்ற அன்புடையோனே... தீர்ப்புநாளின் அதிபதியே... உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக. அன்பு, பாசம், கருணை, சகோதரத்துவம் ஓங்க செய்து, உலகமெங்கும் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக ஆமீன்!
நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமல், கல்லாமை இல்லை, என்ற நிலையை ஏற்படுத்தி, இந்த நல்ல நாளில் மட்டுமின்றி இனிவரும் நாட்களிலும், எல்லாருக்கும் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம். எல்லாம் வல்ல இறைவனே... உன்னிடமே உதவி கேட்கிறோம். ஆமீன்!
நன்றியும், கருணையும், நட்பும், உதவும் மனோபாவமும் நம்மனங்களில் சுரக்க செய்வாயாக அல்லாஹ்... ஆமீன்... யாரப்புல்... ஆமீன்!- பஸி உர் ரஹ்மான் -
****
பிறவிப்பயன் பெற்ற பயணம்!
''உலகம் ஒன்றே அதில் உறையும் மாந்தர் ஓர் குடியினரே'' என்ற வாக்குக்கு ஒப்ப, உலகின் பல நாடுகளை பார்க்கும் பாக்கியம் கிடைத்தாலும்; என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாக, ஹஜ் பயணம் அமைந்தது. ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண் இரு பாலருக்கும் வழி செலவுக்கும்; முடிந்து திரும்பும் வரை வீட்டு செலவுகள் ஏற்பாடு செய்ய முடிந்தவர்கள் அனைவருக்கும் ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது.
திருமறையாம் திருக்குர் ஆன்(3:97), ''அல்லாஹ்விற்காக அவன் திருவீட்டை ஹஜ் செய்வது அதன் பால் போய் வர சக்தி பெற்ற மனிதர்கள் மீது கடமையாகும்.'' இதில் சில முக்கிய ஒழுக்கங்கள் உள்ளன.
முக்கியமாக ஹஜ்ஜிக்காக செலவு செய்யப்படும் பணம் ஹலாலான முறையில் சம்பாதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பெருமைக்கும்; புகழுக்கும்; உலக நோக்கமின்ற அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்ற துாய உள்ளத்துடன் பயணம் செய்ய வேண்டும்.
பயணத்துக்கு முன்பு இயன்ற அளவு ஏழை எளிய மக்களுக்கு தருமம் செய்வது மிகவும் பயன் தரும்.இந்த பயணத்தின் போது, ''இஹ்ராம் - என்கிற ஆடை அணிய வேண்டும். இடுப்பிலிருந்து வேட்டி போல கட்டிக் கொண்டு, மேலே ஒரு துண்டு உடலில் போர்த்திக் கொண்டு புறப்பட வேண்டும்; பெண்கள் தலைமுடி தெரியாத வண்ணம்; முழு உடலையும் மூடிய நிலையில் முகம் மட்டும் திறந்திருக்க ஆடை அணிந்து பயணம் புறப்பட வேண்டும்.
''ஹஜ்ஜிக்காக உம்ராக்காக இஹ்ராம் கட்டுகிறேன் என நிய்யத் (நேர்த்தி) செய்து கொள்ள வேண்டும். பின் தல்பியா ஓத வேண்டும்.''
''நான் ஆஜராகி இருக்கிறேன்; நிச்சயமாக எல்லா புகழும் அருட் கொடைகளும் உனக்கே உரியது. எல்லா ஆட்சி அரசாங்கமும் உனக்கே உரியது; உனக்கு இணை எவருமில்லை.'' இதை ஆண்கள் உரக்கக் கூறி தன் பயணம் முழுவதும் மக்கா மாநகர் காபாவை பார்க்கும் வரை சொல்லி வரவேண்டும்.
விமானப்பயணம் சென்னையிலிருந்து ஜித்தா விமான நிலையத்தில் நிற்கிறது.இங்கு, எல்லா வகையான ஆவணங்கள் சரிபார்த்து பின் மக்காவுக்கு கார் அல்லது பஸ் மூலமாக பயணம் செய்யலாம்; நேராக நம் தங்குமிடம் சென்று சாமான்களை வைத்துவிட்டு குளித்து மாற்று இஹ்ராம் உடையுடன், 'அல்லாஹ் உன் கிருபைக் கதவுகளை எனக்கு திறந்துவிடு' என கூறிய வண்ணம் உள்ளே நுழைந்து, காபா எனப்படும் இறை இல்லத்தை கண்ணுற வேண்டும்.
பின் கதறிக் கூவி அழுது, 'இறைவா நான் பட்ட சிரமம் செலவிட்ட பணம் அனைத்தும் எம்மாத்திரம். நான் என் பிறவிப்பயன் அடைந்த பலனை உணர்கிறேன்' என்கின்ற எண்ணம் மேலோங்கி, காபாவை ஏழு முறை சுற்றி தவாப் செய்து கூட்டம் குறைவாக இருந்தால், காபாவின் ஓர் மூலையில் ஹஜ்ரே அஸ்வத் என்கின்ற இடத்தில் முத்தமிட வேண்டும்.
பின், 2 ரகாத், ''தவாபே - காபா'' தொழுகை முடித்து; பின்னர் உலக முழுவதுமுள்ள மனித சமுதாயத்துக்கு துவாபிரார்த்தனை செய்தபின், அங்கிருந்து அருகிலுள்ள சிறிய குன்று மலை சபாவுக்கு சென்று குன்றின் மீது ஏறி நின்று காபாவை நோக்கி துவா செய்த வண்ணம் மறு முனையில் உள்ள மர்வா மலைக்குன்று சென்று அங்கிருந்து மீண்டும் சபா மலைக் குன்றுக்குமாக, ஏழு முறை சென்று வரவேண்டும்.
கடைசியில் மர்வா மலைக்குன்றில் நடை முடிந்ததும் ஆண்கள் தங்கள் தலைமுடியினை இறக்கி குளித்து தம் சாதாரண ஆடை அணிந்து கொள்ளலாம்.
இப்படியாக நம் முதல் உம்ரா கடமை நிறைவேறுகிறது. இப்பொழுது நாம் மக்காவில் பிறை 8க்கு காத்திருக்க வேண்டும், ''ஹஜ்'' கடமை, ஐந்து நாட்கள் நிறைவேற்ற உலகில் பயணங்கள் பல இருக்கலாம். ஆனால், இந்த, ''ஹஜ் - உம்ரா'' பயணம் நாம் ஏன் பிறந்தோம்; என பதிலளிக்கும் பயணம் பிறவிப்பயன் பெற்ற பயணம் என்றால் மிகையாகாது.
கருணை கொண்ட ரஹ்மான் எல்லாருடைய, ''ஹஜ் - உம்ரா'' கபூல் செய்வானாக உலக முஸ்லீம்கள் சங்கமத்தை ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்.எம்.எ.ஷவுக்கத் அலி
****
ஒரு தாயின் கண்ணீர்!
ஒரு தாயின்
கண்ணீர்
தண்ணீரானது
உப்பு கரிக்க வேண்டியது
இனித்தது.
ஒரு குழந்தையின்
கதறல் இன்று
உலகின் தாகத்தையே
தீர்க்கிறது.
நில்... நில்... என்று தாய் அன்று
சொல்லாமல்
இருந்தால்
இன்று வரை
பூமி இறைத்திருக்கும்
போதும் அதுவே
உலகின் இறுதி வரை நிலைத்திருக்கும்!
****
