ADDED : அக் 15, 2015 10:48 PM

நடிகர் சங்க தேர்தல், 18-ம் தேதி நடக்க உள்ளது. நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியில், அவர் மட்டுமாவது வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில், பிரசாரம் திசை
திரும்பியுள்ளது.இதுகுறித்து, 'கோலிவுட்' வட்டாரங்கள் கூறியதாவது:'தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமாருக்காவது, உங்கள் ஓட்டை அளியுங்கள்' என, அவரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவும், அவரது ஆதரவாளர்கள் சிலரும், சென்னையில் வசிக்கும், நாடக நடிகர், நடிகையர்களை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலமாக பேசியும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
குறிப்பாக ராதிகா, 'என் கணவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர். தமிழக சட்டசபை தேர்தல் வர உள்ளது; நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றால் தான், அவரது செல்வாக்கு சரியாமல் இருக்கும். அப்போது தான், அ.தி.மு.க., கூட்டணியில், அதிக தொகுதிகள் கிடைக்கும்; கட்சி வளர்ந்தால், நடிகர் சங்கத்தையும் அவர் வளர்ப்பார்.
எனவே, அவரை வெற்றி பெற செய்யுங்கள்' என, கூறிவருகிறார்.அதே நேரத்தில், சரத்குமார் அணியின் கோபம், விஷால் அணிக்கு ஆதரவாக செயல்படும், நடிகர் வடிவேலு மீது திரும்பியுள்ளது.
'வடிவேலுவை காணவில்லை; நான்கரை ஆண்டுகளாக...' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை, சென்னையில், சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி தியாகு ஒட்டியுள்ளார். இதனால், நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள், போலீசில் புகார் அளிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இவ்வாறு கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -
