தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஜனநாயக சோதனை சாலையில்-6: ஏன் கத்துகிறார்கள்? ஜெயமோகன்

ஜனநாயக சோதனை சாலையில்-6: ஏன் கத்துகிறார்கள்? ஜெயமோகன்

ஜனநாயக சோதனை சாலையில்-6: ஏன் கத்துகிறார்கள்? ஜெயமோகன்


ADDED : மார் 24, 2016 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2016 09:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் ஜனநாயகம் பற்றி யோசிப்பவர்கள் அனைவருமே வாசித்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான நுால் ஜெர்மானிய சர்வாதிகாரியான ஹிட்லர் எழுதிய, 'மெயின் காம்ப்' என்னும் சுயசரிதை. பின்னாளில் மார்க்சிய சிந்தனையாளராகிய வில்ஹெல்ம் ரீஹ் [Wilhelm Reich] , 'பாசிசத்தின் மந்தை உளவியல் - ஹிட்லரின் சுயசரிதையை முன்வைத்து' என்ற நூலில் மிக விரிவாக, ஹிட்லரின் பிரச்சார உத்திகளைப் பற்றியும் அவர் பொதுமக்களை புரிந்துகொண்டிருந்த முறை பற்றியும் விவாதிக்கிறார்.

ஹிட்லர் தன் சுயசரிதையில் சொல்லியிருக்கும் பல கருத்துக்களை வில்ஹெல்ம் ரீஹ் ஆராய்கிறார். சிலவற்றை நாமே அறிந்திருப்போம். ஹிட்லர் சொல்கிறார், ''எழுத்து வாசிப்பு என்பவற்றுக்கு வெகுஜன அரசியலில் இடமே இல்லை என்று. மக்கள் வாசிப்பவற்றை பொதுவாக நினைவில் கொள்வதில்லை. சொல்லப்போனால் வாசிப்பதில் மக்கள் ஆர்வமே காட்டுவதில்லை. அவர்களுக்கு மேடைப் பேச்சுதான் முக்கியமாகப்படுகிறது. மேடையில் தீவிரமாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் தான் மக்களிடம் சென்று சேர்கின்றன. அதிகாரத்தை கைப்பற்றுபவர்கள் எழுத்தாளர்களோ சிந்தனையாளர் களோ அல்ல, மாபெரும் வாயாடிகள் தான்.'' மேடையில் எப்படி பேசவேண்டும் என்பதையே ஹிட்லர் எழுதி வைத்திருக்கிறார். தர்க்கபூர்வமாக, சிந்தனையை தூண்டும் விதத்தில், ஆதாரபூர்வமாகப் பேசுவோமென்றால் அதைக் கேட்பவர்கள் நம்மிடம் வாதிடத்தான் முன்வருவார்கள் என்கிறார். அவர்கள் நம் தரப்பை ஒருபோதும் முழுமையாக ஏற்க மாட்டார்கள். ஆனால் மேடையிலே அழுது கொந்தளித்து, உணர்ச்சிப் பெருக்காக ஒரு பிழையான கருத்தை முன்வைத்தால் கூட அந்தக் கணத்தில் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். அதாவது மேடையிலே தேவைப்படுவது கருத்தல்ல, வெறும் நாடக நடிப்பு தான் என்கிறார் ஹிட்லர்.

மேடையிலே பேசுபவர் ஒளியில் இருக்க, கேட்பவர்கள் இருளில் இருக்க வேண்டும் என்று ஹிட்லர் வகுக்கிறார். பேசுபவர் கைகளை மிக வேகமாக ஏற்றி இறக்கி பேச வேண்டுமென்று சொல்கிறார். அப்படி கையசைப்பது பேசப்படும் கருத்தை கூர்ந்து கவனிப்பதை உண்மையில் தடுக்கிறது. ஆனால் கேட்பவனுடைய ஆழ்மனம் தன்னையறியாமலே அச்சொற்களை ஏற்றுக் கொள்கிறது. மேடையிலே அழுவதும், விம்முவதும், முகத்தை மூடிக்கொண்டு திரும்பிக் கொள்வதுமெல்லாம் மிக அவசியம் என்கிறார் ஹிட்லர். ஒருவர் நம் கண்ணைப்பார்த்து அழுதால் நாமும் அழுவோம். சிரித்தால் நாமும் அறியாமலேயே சிரிப்போம். அதற்குக் காரணம் தேவை இல்லை. மேடைப்பேச்சு அதைத்தான் செய்கிறது.

மிக மெல்லிய குரலில் பேச்சை இறக்கி, அரங்கில் இருப்பவர்கள் கூர்ந்து கேட்க வைத்துவிட்டு, திடீரென்று உரத்த குரலில் சொல்ல ஆரம்பிப்பது ஒரு முக்கியமான பேச்சுமுறை என்று ஹிட்லர் கண்டுபிடித்தார். அது கேட்பவர்களை திடுக்கிடச்செய்யும். அவர்கள் அதை கவனிக்காமலிருக்க முடியாது. அப்படி உரத்த குரலில் சொல்லப்படும் விஷயம் மிக முக்கியமானது என்ற எண்ணத்தை கேட்பவர்களிடம் உருவாக்கும். அது அசட்டுக்கருத்தாகக்கூட இருக்கலாம். இவ்வாறு நாடகத்தனமாக ஒரு சமூகத்தை அழிக்கக்கூடிய கருத்தையே சொல்லி அந்த சமூகத்தை ஏற்க வைத்துவிடலாம் என்கிறார் ஹிட்லர். மாபெரும் மேடைப் பேச்சாளராகிய ஹிட்லர் ஜெர்மானிய சமுதாயத்தைச் சேர்ந்தவரே கிடையாது. அந்தத் தேசியத்துக்கு வெளியில் இருந்து வந்தவர். ஆனால் மொத்த ஜெர்மனியையே தன்னுடைய பேச்சாற்றலால் அடிமைப் படுத்தி, ஆட்சிக்கு வந்து, அந்த நாட்டை போரில் ஈடுபடுத்தி, அந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்து, அம்மக்களின் வாழ்க்கையைக் குப்பைக் கூடைக்கு கொண்டு சென்றார். 30 லட்சம் யூதர்களை கொன்றொழித்தார்.

ஹிட்லர் சொல்கிறார், ''ஒரு மேடைப்பேச்சு ஆயிரம் கட்டுரைகளுக்கு சமம். ஆனால், ஒரு சின்ன அடிதடி நிகழ்ச்சி ஆயிரம் மேடைப்பேச்சுகளுக்கு சமம்! மக்கள் மேடைப்பேச்சுகளைக் கூட கவனிக்க மாட்டார்கள், ஆனால் ஒரு சின்ன அடிதடி நிகழ்த்தினால் அதை உடனே ஆவலோடு விசாரித்து அதை அறிந்து கொள்வார்கள். அது எதன் பொருட்டு என்று உடனே அவர்களிடம் சென்றுசேரும்.'' ஹிட்லர்தான் சாலை மறியல், கடையடைப்பு போன்ற அடிதடி நிகழ்ச்சிகளை அரசியலுக்குக் கொண்டு வந்தவர். இன்றைக்கு நம் அரசியலில் இதெல்லாம் இல்லாத நாளே இல்லை. வளர்ந்த நாடுகளின் ஜனநாயகத்தில் இதெல்லாம் இன்று கிடையாது.கடைசியாக ஹிட்லர் ஒன்றை சொல்கிறார். மக்களிடம் ஒருபோதும் அவர்களுடைய பிரச்னைக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லக்கூடாது. அதை அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்கக்கூடாது. அது அவர்களுக்குப் பிடிக்காது.

அவர்களுடைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் வேறு எவரோதான் காரணம் என்று சொல்லவேண்டும். அப்படி சொல்லப்படுபவர்கள் அந்தச் சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். அந்தப் பொது எதிரியை முன் வைத்து, அவன் மேல் உச்சகட்ட வெறுப்பை தூண்டி பேசிக் கொண்டே இருந்தால் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள். ஹிட்லர் அப்படித்தான் மக்களாதரவை அடைந்து காட்டினார். ஜெர்மனியின் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் யூதர்களே என்றார்.

இன்றைக்கு வரைக்கும் உலக அளவில் ஜனநாயக அரசியலில் கணிசமான அரசியல்வாதிகள் கடைபிடிப்பது இந்த வழிமுறைகளைத்தான். இந்த தேர்தல் களத்தில் மேடையிலே பேசும் பேச்சாளர்களைப் பாருங்கள். இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி பேசுகிறார்கள்? நம்மை சிந்திக்க வைப்பது போல் பேசுகிறார்களா, வெறும் உணர்ச்சிக் கத்தல்களை வெளிப்படுத்துகிறார்களா? வெறும் உணர்ச்சியை வெளிப்படுத்துபவர் நம்மை மோசடி செய்கிறார். நம்மை அறியாமலேயே அவரது அரசியலை ஏற்க வைத்து தன்னுடைய லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார். அதாவது அது ஒரு பிக்பாக்கெட் தந்திரம். நம் சிந்தனையைப் பார்த்துப் பேசுபவர்தான் உண்மையில் எதையாவது சொல்ல முயல்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாருங்கள். எதற்காக அந்த நிகழ்ச்சி? அதை உட்கார்ந்து பார்க்கும் நமக்கு ஏதோ சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறார்கள், இல்லையா? ஆனால் மாறிமாறி உணர்ச்சிவசப்பட்டு கத்தி நமக்கு ஒரு வார்த்தைகூட கேட்காமல் ஆக்கிவிட்டு எழுந்து செல்கிறார்கள். அதனால் என்ன லாபம்? அவர்கள் என்ன முட்டாள்களா?இல்லை, நாம் தான் முட்டாள்கள். தொலைக்காட்சியில் ஒருவர் ஆவேசமாகக் கத்தினால் நாம் என்ன நினைப்போம் தெரியுமா? அவர் சொல்வது நமக்கு கேட்டிருக்காது, ஆனால் அவர் மிக நியாயமான ஒன்றைத்தான் உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார் என்று எண்ணிக்கொள்வோம். நம்மை அறியாமலேயே அவரை ஆதரிக்க ஆரம்பித்திருப்போம். இதுதான் ஹிட்லர் காட்டிய வழி.நாம் படித்தவர்கள். நமக்கு உண்மையைச் சொல்லும் அரசியல்வாதிகள் தேவை. தாகூர் சொன்னார், ''மிக மெல்லிய குரலில் பேசிய காந்திதான் மிக அதிகமான மக்களிடம் பேசினார்,'' என்று. காந்தி உணர்ச்சிகளை தூண்டவில்லை. நம்மிடம் இருக்கும் உணர்ச்சி களே அடங்கும் விதத்தில்தான் அவர் எப்போதும் பேசினார்.

மிக மெல்லிய குரலில், மிகக் குறைவான சொற்களில் அவர் கருத்துக்களை முன்வைத்தார். எந்த ஒரு விஷயத்தையுமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் சாதாரணமாக சொல்லத்தான் காந்தி முயற்சி செய்தார். இன்றைக்கு பதிவு செய்யப்பட்ட அவருடைய உரைகளைக் கேட்கையில் அவர் நமது உணர்ச்சிகளிடம் பேசவில்லை. நம்முடைய மனசாட்சியுடன் மிக அந்தரங்கமாக பேசுகிறார் என்று தோன்றுகிறது. காந்தியும், ஹிட்லரும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். இருவரும் இருதுருவங்கள். ஹிட்லர் உலகத்தை அழித்தார். காந்தி உலகத்தை வாழவைப்பதற்கான கருத்துக்களை சொன்னார். ஹிட்லரை உலகமே வெறுக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மாமனிதர் என்று உலகம் காந்தியை வழிபடுகிறது. இந்தியர்களாகிய நமக்கு காந்தியின் குரல் வழியாக ஒரு ஜனநாயகம் கிடைத்து, அதை ஹிட்லரின் குரலில் பேசுபவர்களிடம் நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் களம் என்பது நாம் வேறுவழியில்லாமல் அரசியலைக் கவனிக்கும் நேரம். மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசுபவர்களைக் கூர்ந்து பார்ப்போம். யார் உணர்ச்சி பிரவாகமாகப் பேசுகிறாரோ அவர் வெறும் நடிகர் என்று புரிந்துகொள்வோம். அவர் ஹிட்லரின் வடிவம். நம் சிந்தனையை நோக்கி பேசுபவர்தான் அரசியல்வாதி.கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com www.jeyamohan.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us