தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தாய் மதம் திரும்புகிறார் செபஸ்டியன் சீமான்

தாய் மதம் திரும்புகிறார் செபஸ்டியன் சீமான்

தாய் மதம் திரும்புகிறார் செபஸ்டியன் சீமான்


ADDED : ஏப் 18, 2016 08:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2016 08:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈ.வெ.ரா.,வின் பேரன், மார்க்ஸின் மாணவன் என அரசியலைத் துவங்கிய செபஸ்டியன் சீமான், படிப்படியாக மாறி வருகிறார். திராவிட தேசியத்தில் பேச்சைத் துவங்கியவர், தமிழ் தேசியத்துக்கு வந்து, இப்போது இந்து தேசியத்தை நெருங்கி விட்டார்.

திராவிட கட்சிகள் மீது அவருக்கு இருக்கும் கோபத்தால், தமிழ் தேசியத்தை கூர்மைப்படுத்துகிறார். அதன் எதிரொலி தான், 'மலையாளி வேண்டாம்; கன்னடர் வேண்டாம்; தெலுங்கர் வேண்டாம்; தமிழகத்தை தமிழர் ஆள வேண்டும்' என்கிறார். இதற்காக, தமிழகத்தையும், தமிழ் மொழியையும் மீட்டவர்கள் யார் என தெரியாமல், அனைவர் மீதும் வசைமாரி பொழிகிறார்.

அவர் முதலில் ஏற்றுக் கொண்ட திராவிட தேசியத்தை சொன்னவர்கள் யாரும், தமிழர்கள் அல்ல. டி.எம்.நாயரும், பி.டி.தியாகராயரும் தமிழர்கள் அல்ல. அண்ணாதுரை தமிழர். சீமானைப் பொறுத்தவரை, தி.மு.க., தலைவர் கருணாநிதியும் தமிழர் அல்ல.மக்கள் நலக் கூட்டணியை தெலுங்கர் கூட்டணி என சீமான் சொல்வதற்கு, விஜயகாந்த், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நாயக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது காரணமாக இருக்கலாம். அவரது கோபம், திராவிடம் பேசி ஏமாற்றியவர்கள் மீது வரட்டும். அதில் நியாயம் இருக்கலாம்.ஆனால், திருமலை நாயக்கரை, கட்டபொம்மனை விமர்சிக்கிறார். மாலிக்காபூர் படையெடுப்பின் போது, தமிழகத்தை காப்பாற்றியது விஜயநகர பேரரசர்கள் தான். நாட்டை மட்டும் அல்ல, தமிழ் மொழியை, பண்பாட்டை, கலாசாரத்தை காப்பாற்றியவர்களும் அவர்கள் தான்.

திருமலை நாயக்கர் சபையில் தான், 'மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ்' இலக்கியத்தை குமரகுருபரர் பாடினார். ஆண்டாளின், 'திருப்பாவை'யை தெலுங்கில் மொழி பெயர்த்தவர் கிருஷ்ண தேவராயர். தமிழ், இந்திய மொழிக் குடும்பத்தின் தலைவன். தமிழும், சமஸ்கிருதமும் கலந்தது தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள்.

இலங்கையை ஆண்ட சங்கிலி என்ற தமிழ் மன்னனை பாதுகாக்க, விஜயநகர பேரரசின் படை சென்றது. இப்படை இலங்கை சென்றடைவதில் ஏற்பட்ட தாமதத்தால், இலங்கையின், கடைசி தமிழ் மன்னனான சங்கிலியை காப்பாற்ற முடியவில்லை. கன்னடம், தெலுங்கு என மொழியால் இவர்கள் பிரிந்து இருந்தாலும், தமிழக நலனுக்காக இவர்கள் செய்த அரிய சேவைகளை மறுக்க முடியாது.

சீமானின் தேர்தல் பிரசாரத்தில், 'தமிழ் தெரிந்தவர் அனைவரும் தமிழன் அல்ல. எனவே, கன்னடர், தெலுங்கர், மலையாளிகளை வெளியேற்றுவோம்' என்கிறார். அவரது பேச்சு கண்டனத்துக்கு உரியது. அவரது இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படும் என, முழுமையாக நம்புகிறேன்.இதற்கு, அவருக்குள் ஏற்பட்டு வரும் மாற்றங்களே காரணம். முதலில் தீவிர நாத்திகக் கொள்கை பேசி வந்தவர் சீமான். இப்போது, அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

முருகனை முப்பாட்டன் என்று அறிவித்து விட்டார். தை பூசத்துக்கு, மனைவியோடு தொண்டர்களையும் பக்தர்களாக மாற்றி, காவடி எடுத்து பழனி செல்கிறார். தமிழர்கள் கொண்டாடும் தைப் பூச திருவிழாவை, அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்கிறார். ஐந்து வகையான நிலப்பரப்பின் ஒன்றான, மருத நிலத்தின் கடவுள் என, கிருஷ்ணனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தை பூசத்தை எப்படி, மனைவி மற்றும் பக்தர்களாக மாற்றி தொண்டர்களோடு கொண்டாடினாரோ, அப்படியே கிருஷ்ண ஜெயந்தியையும் அவர் கொண்டாடுவார்.முருகனை கடவுளாக ஏற்ற, கட்டபொம்மனை தமிழன் அல்ல என, அவர் எப்படி சொல்கிறார் என தெரியவில்லை. முருகனை தமிழ் கடவுள் என்றவர், சிவனை ஆரிய கடவுள் என்கிறார். ஆனால், சிவ பக்தனான ராவணனை ஏற்றுக் கொண்டுள்ளார். இதிலிருந்து, அவருக்கு சிற்சில புரிதல்கள் தேவைப்படுகிறது. அப்புரிதல் வந்ததும், அவர் தெளிவு பெற்று விடுவார்.

திராவிட தேசியத்திலிருந்து, தமிழ் தேசியத்துக்கு மாறிய சீமான், தனக்குக் கிடைக்கும் அனுபவங்கள் மூலம், விரைவில் இந்து தேசியத்துக்கு வந்துவிடுவார் என்பது உறுதி.இதற்கு ஆதாரமாகத் தான், உருது பேசுபவர்கள் தமிழன் அல்ல என சொல்லி உள்ளார். முஸ்லிம்கள் ஒருபோதும் உருது மொழியை மறுப்பவர்கள் அல்ல. எனவே, இந்த விஷயத்தில் சீமான் தெளிவு பெற்றுவிட்டார் என்றே தெரிகிறது. அவர், தன்னை நாடார் என சொல்வதையும், அவர் மனைவி கயல்விழி சீமானும் நாடார் என்பதும் தவறானதே. இருவரும் கிறிஸ்தவர்கள்.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் இரண்டாவது மனைவியும், கயல்விழியின் தாயும் கிறிஸ்தவர். எனவே, செபஸ்டியன் சீமானும், கயல்விழி சீமானும், முருகனையும், கிருஷ்ணனையும் முப்பாட்டனாக ஏற்றுக் கொண்ட பின், அவர்கள் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும். இந்து மதம் ஒரு மதம் அல்ல. அது வாழ்வியல் முறை. அதை ஏற்றுக் கொள்வதில், சீமானுக்கும் பிரச்னை இருக்காது. அவர் விரைவில் இந்து மதம் திரும்புவதை ஆவலோடு எதிர்பார்ப்பதோடு, என் தலைமையில், அவரை மனதார வரவேற்கவும் காத்திருக்கிறோம்.அர்ஜுன் சம்பத்,நிறுவனர், இந்து மக்கள் கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us