sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹைகூ: தமிழ்க் கவிதையின் கம்பீரம்

/

ஹைகூ: தமிழ்க் கவிதையின் கம்பீரம்

ஹைகூ: தமிழ்க் கவிதையின் கம்பீரம்

ஹைகூ: தமிழ்க் கவிதையின் கம்பீரம்


ADDED : ஜூலை 14, 2016 12:02 AM

Google News

ADDED : ஜூலை 14, 2016 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“ஹைகூ ஒவ்வொன்றும் ஒரு தனிவார்ப்பு, பிசிறில்லாத சிறுசிற்பம், அலாதியான அழகு, கம்பீரம்” என ஹைகூ கவிதையின் திறத்தினைப் பறைசாற்றுவார் கவிஞர் தமிழ்நாடன். தமிழ்க் கவிதை உலகில் புதுக்

கவிதை அமைத்துத் தந்த தோரண வாயில் வழியாக 1984ல் தொடங்கிய ஹைகூ பயணம், இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வாழையடி வாழையெனப் புதுப்புதுக் கவிஞர்கள் தோன்றி, ஹைகூவின் வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.

நெல்லை சு.முத்துவின் பார்வையில்,

“மூன்றடிச் சொற்செட்டுநேரடி அனுபவ வெளிப்பாடு

மூன்றாவது அடி மின்தாக்கு”

- என்னும் மூன்று பண்புகளும் பொருந்தியதே சிறந்த ஹைகூ கவிதை. பாடுபொருளாலும் பாடும்முறையாலும் சிறந்து விளங்கும் ஒரு சில ஹைகூ

கவிதைகள் குறித்து காண்போம்.

விலகி இருக்கும் மனித உறவுகள்

'வெறுங்கை என்பது மூடத்தனம் - விரல்கள் பத்தும் மூலதனம்'

என்னும் எழுச்சி மிகு வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. அவரது உடன்பிறப்பு மலர்மகன். அவரும் ஒரு சிறந்த மரபுக் கவிஞர் ஆவார். 'தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்...' என்பது அவர் வெளியிட்டுள்ள ஹைகூ

கவிதை தொகுப்பு. அதில் இடம் பெற்றுள்ள ஹைகூ இது: “ தொடர்பு எல்லைக்கு அப்பால் -உறவுகள்”

இன்று உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் மனிதனால் தொடர்பு கொள்ள முடிகின்றது. தொடர்பியல் அந்த அளவிற்கு இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தொடர்பு எல்லைக்குள் வாழும் மனித உறவுகளோ விலகி இருக்கின்றன.

குடும்ப உறுப்பினர்கள் இடையே இடைவெளியும் விரிசலும் மிகுந்து காணப்படுகின்றன என்பதை நயமாகப் பதிவு செய்துள்ளார் மலர்மகன். இல்லற வாழ்வின் பதிவு

இல்லற வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால், கணவன்--மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுத்துப் போவது தான் முக்கியம். 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்னும் ஆன்றோர் அமுத மொழி. தங்கம் மூர்த்தி நகைச்சுவை உணர்வுடன் இல்லற வாழ்வின் இன்றியமையாத பக்கம் குறித்து இங்ஙனம் பாடியுள்ளார்:

“பட்டிமன்றம் முடிந்துதாமதமாய் வீடு திரும்பினேன்

வழக்காடு மன்றம்”

கள்ளங்கரவு கொஞ்சமும் இல்லாத - சூதுவாது சிறிதும் அறியாத - வஞ்சமோ சூழ்ச்சியோ துளியும் தெரியாத - குழந்தைகள் உலகினைப் பற்றிய அற்புதமான ஹைகூ கவிதைகளின் தொகுப்பு வசீகரனின் 'குட்டியூண்டு.' கவிதைத் தொகுப்பின் தலைப்பிலேயே கவித்துவம் கொலுவிருக்கக் காண்கிறோம். குழந்தைகள் உலகினை நடப்பியல் பாங்கில் வசீகரன் உள்ளது உள்ளபடி படைத்துக் காட்டியுள்ள ஹைகூ:

“ தனித்து நின்ற குழந்தையிடம்யார்நீ என்றதும் சொன்னது:

'எங்க அப்பாவுக்கு நான் பொண்ணு!'”

ஹைகூவின் உயிர்ப் பண்பு

ஹைகூவுக்கு வலிமையையும் வனப்பையும் சேர்ப்பது அதன் ஈற்றடியே. இதனை, 'படுத்துக் கொண்டே படித்தேன், துாக்கி நிறுத்தியது, ஹைகூவின் கடைசி வரி' என ஹைகூ வடிவிலேயே படம்பிடித்துக் காட்டுவார் தெ.வெற்றிச்செல்வன்.

“ சுதந்திர தினம்மனதிற்குள் துக்கம்வந்தது ஞாயிற்றுக்கிழமை”

சுந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தால், ஒரு நாள் விடுமுறை அல்லவா இல்லாமல் போகும்? மனத்திற்குள் துக்கம் பொங்கி வராதா என்ன? என்கிறார் கவிஞர் நவதிலக். இல்லாவிட்டால் கவிஞர் மீராவும் காதலியைக் குறித்து, 'கிழமைகளில் அவள் ஞாயிறு' என்று பாடி இருப்பாரா? தமிழனின் விடுமுறை மோகத்தினை மென்மையாகச் சாடும் கவிதை இது!

வாசகரும் கூட்டுப் படைப்பாளி

'கவிஞன் இறங்கிக் கொள்ள, வாசகன் அதன் மீது பயணம் தொடர்வான். அதுதான் ஹைகூ' என்பர் அறிஞர். வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால்,

'ஹைகூ ஓர் உணர்வு நிலை, வாசகனைக் கவிஞனின் நிலைக்கு உந்தி உயரத் தள்ளும் மிகச் சிறந்த வடிவம் அது.' இவ்விலக்கணத்திற்குக் கட்டியம் கூறும் பா.உதயகண்ணனின் ஹைகூ...

“காரைத் துடைத்துக்காசு கேட்டான்

எட்டிப் பார்த்தது நாய்”

இங்கே காரைத் துடைத்து விட்டுக் காசு கேட்பது ஒரு குழந்தைத் தொழிலாளி என்று தெளிவாகத் தெரிகிறது. ஆயின், 'எட்டிப் பார்த்தது நாய்' என்னும் ஈற்றடியில் இடம் பெறும் 'நாய்' என்பது யார்? புதியவர் எவரையேனும் கண்டால் குரைப்பது நாயின் இயல்பு. அது போல், சிறுவனிடம் தனது வெறுப்பை உமிழும் - விரட்டி அடிக்கும் - காரின் உரிமையாளரும் ஒரு வகையில் பார்த்தால் 'நாய்' தான்! கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் கவிதையில் ஆழ்ந்திருக்கும் கவிஞரின் உள்ளம் புலனாகின்றது.

“எவன் கண்பட்டதுவிற்கவே இல்லை

திருஷ்டி பொம்மைகள்”

என்பது வித்தியாசமான பாடுபொருளைத் தன்னகத்தே கொண்ட செ.ஆடலரசனின் ஹைகூ.

'திருநெல்வேலிக்கே அல்வா' என்பது போல், 'திருஷ்டி பொம்மைகளுக்கே' திருஷ்டியாம்!

காலத்திற்கு ஏற்ற பாடுபொருள்

ஹைகூ கவிதையின் தனித்தன்மை காலத்திற்கு ஏற்ற, குறிப்பாக, இந்த நுாற்றாண்டிற்கே உரிய பாடுபொருட்களைக் கையாளுவதாகும். அவற்றுள் ஒன்று விளைநிலங்கள் இன்று விலைநிலங்கள் ஆகி வரும் கொடுமை ஆகும். பச்சைப் பசேல் எனத் திகழ்ந்த நெல் வயல்கள் எல்லாம், இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உருமாறிவிட்டன. இதனை ரத்தினச் சுருக்கமான

மொழியில் பதிவு செய்துள்ளது செந்தமிழினியனின் ஹைக்கூ:

“ விளை நிலங்கள்விலை நிலங்களாயினவீடுகள்”

'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பது பல்லாண்டு காலமாக அரசியல்வாதிகள் முதலாக தமிழ் ஆர்வலர்கள் வரை அயராது பறைசாற்றி வரும் கொள்கை முழக்கம். ஆயினும், நடைமுறையில் இன்னும் அந்தக் கனவு நனவாகவில்லை. இந்த கசப்பான உண்மையை - அய்யாறு ச.புகழேந்தி ஹைகூ கவிதை ஒன்றில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றாற் போல், காரசாரமாகப் பதிவு செய்துள்ளார்:

“ எங்கும் தமிழ்எதிலும் தமிழ்இல்லை”

வாழ்வியல் பதிவு

எட்டு மணி நேரம் துாங்கும் மனிதன் - எட்டு மணி நேரம் உழைக்கும் மனிதன் - ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வாழ்கிறான் என்று கேட்டால், அவனால் பதில் சொல்ல முடியாது. இந்த வாழ்வியல் உண்மையைப் பொட்டில் அடித்தாற் போல் எடுத்துரைக்கிறது இ.பரிமளாவின் ஹைகூ ஒன்று:

“ வாழ்நாளில்வாழ்ந்த நாள்?

விரல்களுக்குள்”

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மென்மையான கருணை மனத்துக்குச் சொந்தக்காரர்கள் ஹைகூ கவிஞர்கள். பஞ்சு நெஞ்சு படைத்த அவர்கள், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளுக்காகக் கூட அழுகின்ற இயல்பினர். இவ் வகையில் நினைவுகூரத் தக்க ரமா ராமநாதனின் ஹைகூ இதோ:

“அடித்துத் துவைக்கமனமில்லை

சட்டையில் பூக்கள்!”

நிறைவாக ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல்,

“தமிழ்க் கவிதை என்ற நதி வற்றாது ஓடுகிறது. தமிழை வளப்படுத்துகிறது, தமிழால் வளம் பெறுகிறது.”

அவரது இக் கூற்று இன்றைய ஹைகூ கவிதைக்கும் பொருந்தி வரும் உண்மையே.- பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரைeramohan@gmail.com






      Dinamalar
      Follow us