UPDATED : ஆக 18, 2016 02:27 AM
ADDED : ஆக 18, 2016 01:57 AM

உலகின் முதல் 'பிரமிடு' ஒன்றை கஜகஸ்தான் நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது எகிப்தில் உள்ள 'கிசா பிரமிடு'. பொதுவாக 'பிரமிடுகள்' மறைந்த மன்னர்களின் உடல்கள், மற்றும் அவர்களின் பொருட்கள் புதைக்கப் படுவதற்காக பயன்படுத்தப்பட்டது. 'பிரமிடு' முழுவதும் கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். அடிப்பகுதியில் அதன் அளவு பெரியதாக இருக்கும். உயரே போகப் போக அதன் அளவு குறைந்து கொண்டே செல்லும்.
50 லட்சம் டன்:உலக அதிசயத்தில் இடம் பெற்றிருக்கும் 'கிசா பிரமிடு' எகிப்தின் பழமையான 'பிரமிடு'. இது அந்தக்காலத்திலேயே உலக அதிசயங்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. தற்போது வரை அது நீடித்து வருகிறது. கி.மு., 2,560ம் ஆண்டில் குபு மன்னரால் கட்டப்பட்டது.
இதனை கட்டி முடிக்க 20 ஆண்டுகள் ஏற்பட்டது எனவும் நம்பப்படுகிறது. 50 லட்சம் டன் எடை கொண்டது. தினமும் 800 டன் கற்கள் பயன்படுத்தப்பட்டது.
இதற்கு தேவையான கற்கள் 800 கி.மீ., துாரத்தில் உள்ள அஸ்வான் என்ற இடத்தில் மலைப் பகுதிளில் இருந்து கற்களை வெட்டி நைல்நதியில் படகு மூலம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு 50 லட்சம் டன் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 481 அடி உயரம் கொண்ட இந்த 'பிரமிடு', முழுவதும் மனிதனால் கட்டப்பட்ட உலகில் உயரமான கட்டடம் என்ற பெருமையை 3,800 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் பெற்றுள்ளது.
எப்படி முடிந்தது:தற்போது போல இயந்திரங்களும், தொழில்நுட்பங்களும் அந்தக் காலத்தில் கிடையாது. 'பிரமிடு'கள் நகரில் இருந்து வெளியே பாலைவன பகுதிகளில் தான் அமைக்கப் பட்டுள்ளது. அப்படியெனில், இவ்வளவு பெரிய கற்களை எங்கிருந்து, எப்படி கொண்டு வந்திருப் பார்கள் என்று நினைக்கும் போதே பிரமிப்பாக உள்ளது. மலைகளை உடைப்பதற்கும் தற்போது போல கருவிகள் இல்லை. இவ்வளவு பெரிய கற்களை கொண்டு 'பிரமிடை' அமைத்திருப்பது அதிசயமான ஒன்று தான்.
முதல் 'பிரமிடு': எகிப்தில் பிரமிடு கட்டப்படுவதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு., 3500) உலகின் முதல் பிரமிடு கஜகஸ்தான் நாட்டில் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள்
கண்டு பிடித்துள்ளனர். இது எகிப்தில் உள்ள 'டிசோசர்' பிரமிடைப்போலவே உள்ளது.
இது எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து வடகிழக்கில் 6,270 கி.மீ., துாரத்தில் கஜகஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் தால்டா ஆற்றின் அருகே கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இடிந்து தரைமட்டமான நிலையில் உள்ளது.
இதனை கடந்த ஆண்டே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாகவும், அதனை ரகசியமாக ஆய்வு செய்துள்ளனர். தற்போது உலகின் பார்வைக்கு இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இதில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கஜகஸ்தானின் கரகண்டா மருத்துவ பல்கலைக்கழகத்தில்
ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
