சென்னையில் 45 மாடி கட்டடம் : விதிகளை தளர்த்தி அரசு அனுமதி
சென்னையில் 45 மாடி கட்டடம் : விதிகளை தளர்த்தி அரசு அனுமதி
ADDED : மார் 08, 2017 11:28 PM
சென்னையில் முதல் முறையாக, 45 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தை செயல்படுத்த, தனியார் நிறுவனத்திற்கு, தமிழக அரசு விதிகளை தளர்த்தி, அனுமதி அளித்துள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் இரண்டாவது முழுமை திட்டத்தில், கட்டடங்களின் உயரம் தொடர்பான விதிகளில், சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி, சென்னையில், 60 மீட்டர் உயரம் வரை, கட்டடம் கட்டலாம். அதற்கு, இந்திய விமான போக்குவரத்து துறை, தீயணைப்புத் துறை மற்றும் வானிலை ஆராய்ச்சித் துறைகளின் தடையின்மை சான்று பெறுவது அவசியம். இத்தகைய சான்று பெறுவது சாத்தியமில்லை என்பதால், சென்னை நகருக்குள் உயரமான கட்டடங்கள் வராமல் இருந்தது. ஆனால், சென்னை புறநகரில், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லுார், ஏகாட்டூர் பகுதிகளில், 20, 30 மற்றும் 40 மாடிகள் வரை, கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இந்த பகுதியில் விமான போக்குவரத்து பிரச்னை இருக்காது என்பதால், திட்ட அனுமதி சாத்தியமாகிறது.
45 மாடி கட்டடம் : சென்னையில், நெரிசல் மிகுந்த பெரம்பூரில், பழைய பின்னி வளாகத்தில், ஒரு தனியார் நிறுவனம், 45 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டது. 928 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் வகையில், இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 11 பிளாக்குகள் கொண்ட இத்திட்டத்தில், 24 மாடிகள், 36 மாடிகள், 45 மாடிகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இந்த வளாகத்தில், 11 திரைகள் கொண்ட தியேட்டர், வணிக வளாகம் கொண்டதாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், சி.எம்.டி.ஏ.,வின் வளர்ச்சி விதிகளுக்கு உட்படாததால், கட்டுமான நிறுவனம், விதிவிலக்கு கோரி அரசிடம் மனு செய்தது. இதை பரிசீலித்த தமிழக அரசு, சி.எம்.டி.ஏ.,வின் கட்டட உயரம் தொடர்பான விதிகளில் இருந்து, விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, அரசிதழ் அறிவிப்புகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பிறப்பித்துள்ளார். சென்னை நகரில் நெரிசலான பகுதியில், 45 மாடி கட்டடம் கட்டும் திட்டத்திற்கு விதிகளை தளர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது, கட்டுமானத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -