என்னை அமைதிப்படுத்தலாம்; கட்டுப்படுத்த முடியாது : நடிகர் கமல் ஆவேசம்
என்னை அமைதிப்படுத்தலாம்; கட்டுப்படுத்த முடியாது : நடிகர் கமல் ஆவேசம்
ADDED : மார் 13, 2017 10:21 PM

''என்னை அமைதிப்படுத்தலாமே தவிர, யாராலும் கட்டுப்படுத்த முடியாது,'' என, நடிகர் கமல் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில், பல அரசியல் விமர்சனங்களைக் கூறிவரும் நடிகர் கமல், சமீபத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். 'தவறு செய்யும் அரசியல்வாதிகளை ஆதாரத்தோடு தட்டிக்கேட்க வேண்டும்' என, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனால், கமல் விரைவில் அரசியலுக்கு வருவார் என, அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
குரல் கொடுப்பேன் : இந்நிலையில், தனியார் 'டிவி' ஒன்றுக்கு, கமல் அளித்த பேட்டி, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டியில், கமல் கூறியதாவது: அரசியல் தற்போது வியாபாரமாகி விட்டது. நிகழ்கால அரசியலுக்கு தீங்கு ஏற்படுமானால், நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். என்னை அமைதிப்படுத்தலாமே தவிர, யாராலும் கட்டுப்படுத்த முடியாது. என் வாழ்வில், எந்த ஊழலுக்கும் இடம் தரவில்லை. ஓட்டை, விலைபேசி விற்று விட்டால், அவர்கள் ஆட்சி முடியும் வரை, கேள்வி கேட்கும் அருகதை, வாக்காளர்களுக்கு கிடையாது. யாருடைய ஆட்சியாக இருந்தாலும், குற்றத்தை யார் செய்தாலும் தட்டிக்கேட்க வேண்டும். விஸ்வரூபம் படத்திற்கு, இஸ்லாமியர்களால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. படத்தை வெளியிடவிடாமல் தடுத்ததே, அப்போதைய ஆட்சியாளர்கள் தான். ஜெ., மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை, அனைவருக்கும் உள்ளது. தமிழகத்திற்கு, உடனே தேர்தல் நடத்த வேண்டும். இந்த ஆட்சி நான்கு ஆண்டுகள் தொடர வேண்டும் என, யாரும் சொல்ல வேண்டியதில்லை. அப்படி சொல்வது, கட்டாயத் திருமணம் போன்றது. யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். என்னை அரசியல் கட்சிக்குள் இழுக்க, நீண்ட நாட்களாக முயற்சி நடந்து வருகிறது. நான், இந்நாட்டின் குடிமகன்; அரசியல் பேச தகுதியானவன். தவறுகள் அதிகமாகும்போது, மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல்வாதிகள் மாற வேண்டும்.
ஆதரவாக பேசவில்லை : திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாகக் கூற முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை, திராவிடமும் ஒலித்துக்கொண்டே இருக்கும். தேசியக் கட்சிகள், தமிழகத்திற்குள் நுழைந்தால், திராவிடத்தை நிச்சயம் ஏற்க வேண்டியது இருக்கும். ஓ.பி.எஸ்., - ஈ.பி.எஸ்., என, யாருடனும் எனக்கு பழக்கம் இல்லை. யாருக்கு ஆதரவாகவும் நான் பேசவில்லை. சினிமாவை எப்படி, அனைவரும் விமர்சிக்கின்றனரோ, அதேபோல், நானும் அரசியலை விமர்சிக்கிறேன். நாடு முன்னேற ஜாதி இல்லாத சமுதாயம் வேண்டும். இவ்வாறு கமல் கூறினார்.
