'குட்கா'வால் சட்டசபையில் கடும் அமளி: தி.மு.க., வெளிநடப்பு
'குட்கா'வால் சட்டசபையில் கடும் அமளி: தி.மு.க., வெளிநடப்பு
ADDED : ஜூலை 19, 2017 10:53 PM
சென்னை,சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, குட்கா விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது, குட்கா பாக்கெட்டுகளை காட்டி கோஷமிட்ட, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சரின் பதிலுரையை
புறக்கணித்து வெளியேறினர்.
சட்டசபையில், நிதி, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காட்டமாகப் பேசினார்.
அப்போது, ஊழல் புகார் தொடர்பாக, மாநில அரசுக்கு, வருமான வரித்துறை எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, அதில் குறிப்பிடப்பட்டோரின் பெயர்களை வாசித்து, நடவடிக்கை எடுக்க கோரினார். அப்போது, முதல்வர் பழனிசாமி குறுக்கிட்டு, விளக்கம் அளித்தார்.
இதேபோல, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் ஆவேசமாக பதில் அளித்தனர். அதற்கு, ஸ்டாலினும்
கடுமையாக பதில் கூறினார்.
விவாதம் நடந்த போது, தமிழகத்தில், தடை செய்யப்பட்ட, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தடையின்றி, கடைகளில் விற்கப்படுவதை நிரூபிக்க, பான்பராக் போன்ற குட்கா பாக்கெட்கள் அடங்கிய சரத்தை எடுத்து சபையில், ஸ்டாலின் காண்பித்தார்.
அவரைத் தொடர்ந்து, மா.சுப்பிரமணியன், அன்பழகன், சேகர்பாபு, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல, எம்.எல்.ஏ.,க்கள், குட்கா பாக்கெட்களை, சட்டைக்குள் மறைத்து, சபைக்குள் கொண்டு வந்திருந்தனர்.
அவர்களும், குட்கா பாக்கெட்களை கைகளில் ஏந்தி, சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையை விமர்சிக்கும் வகையில், கோஷங்களை எழுப்பினர். அப்போது, ஸ்டாலின், சில புகைப்படங்களையும், ஆளுங்கட்சி வரிசைக்கு காட்டினார்.
எப்படி கிடைத்தது?
அதைப் பார்த்த, அ.தி.மு.க.,வினர் திடுக்கிட்டனர். உடனே சுதாரித்த முதல்வர், ''தடை செய்யப்பட்ட பொருள் உங்களுக்கு எப்படி கிடைத்தது; அது, இங்குதான்
விற்கப்படுகிறது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது; இதை வன்மையாக கண்டிக்கிறேன்,'' என்றார். அப்போது சபாநாயகர் தனபால், ''என் அனுமதியில்லாமல், இவற்றை இங்கு
காட்டியது முறையல்ல,'' என்றார். எனினும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, சத்தமாக பேசியபடி இருந்தனர். பதிலுக்கு, ஆளுங்கட்சியினரும், கடுமையாக அவர்களை திட்டினர்.
முதல்வர் பழனிசாமி, ''இது விதிமுறைகளுக்கு மாறானது. குட்கா விற்கப்படுவது உண்மையெனில், அது குறித்து காவல்நிலையத்தில் தான் புகார் செய்திருக்க வேண்டும்,'' என்றார்.
அதன்பின், ஸ்டாலின் ஏதோ கோபமாக கூறிவிட்டு, சபையைவிட்டு வெளியேறினார்.
அவருடன், நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் பதிலுரையை புறக்கணித்துவிட்டு, இதர தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர். உடனே, அது குறித்து ஆலோசிப்பதற்காக, சபாநாயகர் தனபால், தன் இருக்கையில் இருந்து தன் அறைக்கு சென்றார்.
அவரது இருக்கையில் அமர்ந்த துணை சபாநாயகர் ஜெயராமன், ஸ்டாலின் எழுப்பிய இரு பிரச்னைகள் தொடர்பான விவாதங்களை, அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
காங்., வெளிநடப்பு இல்லை
வழக்கமாக, தி.மு.க.,வை பின் தொடரும் காங்., கட்சி, நேற்று வெளிநடப்பு செய்யவில்லை. எனினும், ''குட்கா பொருள்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை தேவை,'' என, அக்கட்சியின் தலைவர், கே.ஆர். ராமசாமி வலியுறுத்தினார்.
சிறுவர்கள் விற்கும் அவலம்சட்டசபைக்கு வெளியே ஸ்டாலின் அளித்த பேட்டி:தமிழகத்தில், காவல்துறை, சுகாதாரத்துறை ஊழியர்கள் துணையுடன், குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்கள் விற்கப்படுகின்றன. காவல் துறை துணையுடன் தான் இது
நடக்கிறது. அங்கு போய் எப்படி புகார் கொடுப்பது; சென்னை, நேரு அரங்கம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஜா ஓட்டல்களிலும், சூளை உள்ளிட்ட ஐந்து இடங்களிலும், குட்கா பொருட்கள் விற்கப்படுவதை புகைப்படமே
எடுத்துள்ளோம். மேலும், அதை சிறுவர்கள் விற்கும் அவலமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
20 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை?
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில், குட்கா பாக்கெட்டுகளை காட்டியதால், அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் தனபால் ''தடை செய்யப்பட்ட பொருட்களை சட்ட சபையில் காட்டியது விதிகளை மீறிய செயல். இதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது உரிமைக்குழுவிற்கு அனுப்பப்படும்,'' என்றார். இதைத் தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகளை சபையில்
காட்டிய ஸ்டாலின் உள்ளிட்ட 20 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும் என
தெரிகிறது.
அமைச்சர்களுக்கு சபாநாயகர் உத்தரவு
''எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைகள் மீது, அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சபாநாயகர் உத்தரவிட்டார்.சட்டசபை கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று, கேள்வி நேரத்திற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. சட்டசபை துவங்கியதும், சபாநாயகர் தனபால் கூறியதாவது:
போதிய நேரம் இல்லாததால் எம்.எல்.ஏ.,க்கள் முக்கிய பிரச்னைகளை அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வர அனுமதிக்கிறேன். விரிவாக பேசாமல் பிரச்னையை மட்டும் கூற வேண்டும்; அமைச்சர்கள் பதில் கூற வேண்டாம். அவர்கள் கூறும் கோரிக்கைகளை குறித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள். அதேபோல் எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானங்களையும் அனுப்பி வைக்கிறேன்; அவற்றின் மீதும்
உரிய நடவடிக்கை எடுங்கள்.இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.
