போயஸ் கார்டன் வீடு ஜெ., நினைவு இல்லமாக மாறுமா? சட்ட சிக்கல்கள் குறித்து வழக்கறிஞர்கள் பரபரப்பு கருத்து
போயஸ் கார்டன் வீடு ஜெ., நினைவு இல்லமாக மாறுமா? சட்ட சிக்கல்கள் குறித்து வழக்கறிஞர்கள் பரபரப்பு கருத்து
ADDED : ஆக 19, 2017 07:26 PM

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த, சென்னை, போயஸ் தோட்ட இல்லத்தை, அரசு நினைவிடமாக மாற்றி, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவதாக, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை, பலர் வரவேற்றாலும், ஜெ., அண்ணன் மகள் தீபா, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான சொத்தை, நினைவிடமாக மாற்ற, யாருக்கும் அதிகாரம் இல்லை; அந்த சொத்தின் மீது, எங்களுக்கு சட்டபூர்வ உரிமை உள்ளது' என, தீபா கூறியுள்ளார்.ஜெ.,க்கு நேரடி வாரிசு இல்லை என்றாலும், இரண்டாம் நிலை வாரிசுதாரராக தீபாவும், அவரது சகோதரரும் உள்ளனர். ஜெ.,க்கு சொந்தமான சொத்துகள் குறித்து, உயில் எழுதி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, இன்னும் விடை கிடைக்கவில்லை. உயில் எழுதாமல் இருந்தாலும், இரண்டாம் நிலை வாரிசு என்ற அடிப்படையில், தீபாவும், சகோதரர் தீபக்கும் உள்ளனர்.இது குறித்து, சட்ட நிபுணர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், யு.எம்.ரவிச்சந்திரன்: ஒருவருக்கான சொத்து உரிமை பற்றி, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சட்டத்தின்படி அல்லாமல், அந்த சொத்தை, அவரிடம் இருந்து பறிக்க முடியாது என, தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த உரிமை, அரசியலமைப்பு சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது.பொது நோக்கத்துக்காக, ஒரு சொத்தை அரசு கையகப்படுத்த முடியும்; அதாவது, தொழிற்பேட்டை, சந்தை, குடியிருப்புகள் கட்ட என, ஒரு பொது நோக்கம் இருக்க வேண்டும். அதற்காக நிலத்தை எடுக்கும்போது, உரிமையாளருக்கு நஷ்டஈடு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இங்கே பொது நோக்கம் என, எதை குறிப்பிடுகின்றனர். சொத்தின் உரிமையாளராக வருபவர் எதிர்ப்பு தெரிவித்தால், அரசுக்கு சிக்கல் தான். உரிமையாளராக வருபவர் ஒப்புதல் அளித்தால், வீட்டை நினைவிடமாக மாற்றுவதில் பிரச்னை இருக்காது.உயர் நீதிமன்ற வழக்கறிஞர், என்.ராஜா செந்துார்பாண்டியன்: ஜெ., வசித்த வேதா இல்லம், தற்போது யார் பெயரில் உள்ளது; அந்த சொத்து குறித்து, உயில் எழுதி வைக்கப்பட்டதா என்பது பற்றி, இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவிலும், இந்த சொத்து விபரங்கள் காட்டப்பட்டுள்ளன. ஜெ., மரணத்துக்கு பின், அவரது ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளான தீபா, தீபக் இருவரும், முறைப்படி சட்டபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்த சொத்தை கையகப்படுத்தும் செயலில் ஈடுபடவில்லை.இந்த சூழலில் தான், தமிழக அரசின் நினைவு இல்லம் உத்தரவு வெளிவந்துள்ளது. எந்த சொத்தையும், அரசு நினைவிடமாக அறிவிக்க, சட்டபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின், அதற்கு செயல் வடிவம் கொடுக்க முடியும். ஜெ., வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லம், அரசு சொத்து அல்ல; தீபா, தீபக் இருவரும், ஜெ., வாரிசுகள் என, வருவாய் துறையில் விண்ணப்பித்து, வாரிசு சான்றிதழ் பெற முடியாது. அதற்கு, 2017 ஆக., 9ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, தடையாக உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தே, வாரிசுரிமை சான்று பெற முடியும்.போயஸ் தோட்டத்தில், ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர் என, உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்து, சிறைக்கு செல்லும்போது கூட, அந்த வீட்டில் இருந்து தான், இருவரும் புறப்பட்டு சென்றனர். அங்கு, சசிகலா, இளவரசி ஆகியோரின் உடைமைகள் உள்ளன. சட்ட நடைமுறைகளை பின்பற்றி தான், அவர்களின் பொருட்களை இடமாற்றம் செய்ய முடியும். தீபா, தீபக், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் நடவடிக்கைகளை பொறுத்து, அவர்களிடம் கலந்து ஆலோசித்த பின், நினைவு இல்லம் விவகாரத்தில், இறுதி முடிவெடுக்க இயலும்.மூத்த வழக்கறிஞர், சிராஜுதீன்: போயஸ் தோட்ட இல்லம், தனிப்பட்ட சொத்து. பொது நலன் கருதி, அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படி, ஒரு சொத்தை கையகப்படுத்த முடியும். அதற்கான நஷ்டஈட்டை, உரிமையாளருக்கு, அரசு கொடுக்க வேண்டும். ஆனால், பொது நோக்கத்துக்காக, பொது நலனுக்காக, அந்த நடவடிக்கையை, அரசு மேற்கொள்ள வேண்டும்.வீட்டை கையகப்படுத்தி, நினைவிடமாக மாற்றுவதில், பொது நலன் உள்ளதா, இல்லையா என்பது குறித்து, யாரும் கேள்வி கேட்க முடியும். ஏனென்றால், நினைவிடமாக மாற்றும்போது, பொதுமக்களின் பணம் தான் பயன்படுத்தப்படுகிறது. பெரிய தலைவர்களின் இல்லங்கள், நினைவிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அத்தகைய தலைவர்களின் வரிசையில், ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைப்பது பொருத்தமாக இருக்குமா என்பது குறித்து, நீதிமன்றத்தில் யாரும் கேள்வி எழுப்ப முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.எனவே, ஜெ., இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதில், பல்வேறு சட்டப் பிரச்னைகளை, அரசு சந்திக்க வேண்டியது வரும் என்றே தெரிகிறது. - நமது நிருபர் -
