தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்களுடன் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை
தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்களுடன் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை
ADDED : ஆக 20, 2017 11:59 PM
வேலுார்: தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்களுடன், வேலுாரில் நேற்று, அ.தி.மு.க., இணைப்பு குறித்து, அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
வேலுாரில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அமைச்சர்கள் உதயகுமார், வீரமணி, சண்முகம், நிலோபர் கபில், செல்லுார் ராஜு, சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தினகரன் அணியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் பாலசுப்பிரமணியன், ஜெயந்தி, பார்த்திபன் பங்கேற்றனர்.பின், தினகரன் அணி
எம்.எல்.ஏ.,க்களை தனியாக அழைத்து, அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
அந்த அணியில் உள்ள, ஆம்பூர் எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''தினகரன் கூறியதன் அடிப்படையில் தான், நிகழ்ச்சியில் பங்கேற்றேன்; எங்களால் ஆட்சிக்குபாதிப்பு வராது,'' என்றார்.
குடியாத்தம் எம்.எல்.ஏ., ஜெயந்தி கூறியதாவது:அ.தி.மு.க.,வில், பன்னீர் அணி, தினகரன் அணி மட்டுமே உள்ளன. பொதுச்செயலர் சசிகலாவால் தான், பழனிசாமி முதல்வராகி உள்ளார். அவர் உத்தரவுப்படி, பன்னீர் அணியும், தினகரன் அணியும் விரைவில் இணையும்.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டம் முடிந்த பின், அமைச்சர் சீனிவாசன் கூறியதாவது: இன்று அல்லது நாளைக்குள், இரு அணிகளும் இணைந்து விடும். மக்களின் அன்பை பெற, இணைப்பு நடக்கிறது. எங்கள் அணிக்கு அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் வந்து விடுவர். அதிருப்தி என்பதே கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
