UPDATED : செப் 21, 2017 04:06 PM
ADDED : செப் 21, 2017 03:44 PM

சென்னை: ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனது உறவினர்கள்.
அந்த வகையில் கெஜ்ரிவாலும் எனது உறவினர் என நடிகர் கமல் கூறியுள்ளார்.சென்னை வந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால், நடிகர் கமலஹாசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. இதன் பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்
உறவினர்:
அப்போது கமல் கூறியதாவது: கெஜ்ரிவால் என்னை சந்திக்க வேண்டும் என கேட்டதையே பாக்கியமாக கருதுகிறேன். கெஜ்ரிவால் என்னை சந்தித்தது பெருமை. நாங்கள் சந்தித்து பேசிக்கொண்ட விஷயங்கள் என்ன என்பதை உங்களால் யூகிக்க முடியும். ஊழலை எதிர்ப்பவர்கள் யாருமே என் உறவினர்களாகி விடுவார்கள் என்பது உண்மை. அந்த வகையில் கெஜ்ரிவாலும் எனது உறவினர். எனது தந்தை இருந்த போது அரசியலுடன் இந்த வீட்டுக்கு தொடர்பு உள்ளது. கெஜ்ரிவாலுடன் எனது சந்திப்பு சிலவற்றை தெரிந்து கொள்ள உதவியது. இவ்வாறு அவர் கூறினார்.
அழைப்பு:
பின்னர் கெஜ்ரிவால் அளித்த பேட்டி: நடிகர் என்ற முறையிலும், தனி மனிதர் என்ற முறையிலும் நான் கமலின் தீவிர ரசிகன்.ஊழல் மற்றும் மதவாதம் போன்ற பிரச்னைகளில் நாடு சிக்கியுள்ளது. இது குறித்து ஒத்த கருத்துடையவர்கள் பேச வேண்டும். இணைந்து செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் மதவாதத்திற்கு எதிரான மன நிலையில் உள்ளனர். மதவாதத்திற்கு எதிராக கமல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். கமல் அரசியலில் ஈடுபட வேண்டும். நாடு, மற்றும் தமிழகத்தின் நிலைமை பற்றி ஆலோசித்தோம். எதிர்காலத்திலும் ஆலோசிப்போம். இந்த சந்திப்பு சிறந்ததாக அமைந்தது. வரவேற்பு கொடுத்த கமலுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
