sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அவ்வையின் அமுதமொழிகள்

/

அவ்வையின் அமுதமொழிகள்

அவ்வையின் அமுதமொழிகள்

அவ்வையின் அமுதமொழிகள்


ADDED : அக் 10, 2017 11:58 PM

Google News

ADDED : அக் 10, 2017 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அவ்வைக்கிழவி நம் கிழவி

அமுதினும் இனிய சொல் கிழவி

செவ்வை நெறிகள் பற்பலவும்

தெரியக்காட்டும் பழங்கிழவி'

என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் பாராட்டப்பட்டவர் அவ்வையார்.

முதுமையள், மூதாட்டி,வயதானவள், இறைவி, ஆதியன் என்ற பொருள் எல்லாம் அவ்வை என்ற பெயருக்கு உண்டு.அவ்வையார் ஒருவர் அல்ல. பல காலக்கட்டங்களில் வாழ்ந்து

இருக்கிறார்கள். புலவர் மு.அருணாசலம், அவ்வையார் வாழ்ந்த காலத்தை ஆறு வகைகளாக குறிப்பிடுகிறார். சங்க கால அவ்வையார், இடைக்கால அவ்வையார், சோழர் கால

அவ்வையார், சமயப்புலவர்அவ்வையார் (கி.மு. 14ம் நுாற்றாண்டு), அதன் பின் வாழ்ந்த அவ்வையார் (6ம் நுாற்றாண்டு), பிற்கால அவ்வையார் 17/ 18 ம் நுாற்றாண்டு.புறநானுாற்று மற்றும் தொகை நுால்களில் அவர் எழுதியபாடல்கள் 59. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், பந்தனந்தாதி, நவமணி மாது, அசதிக்கோவை, கல்வி ஒழுக்கம் போன்றவை

அவரது படைப்புகள். இவை தவிர தனி பாடல்களும் உண்டு.

ஆத்திச்சூடி : அவ்வை படைத்துள்ள ஆத்திச்சூடி, இலக்கிய உலகில் புதிய உத்தி. ஒரு வரியில் வாழ்க்கை தத்துவத்தை வகுத்து கூறுவது அற்புதம்.

அறம் செய்ய விரும்பு : அறம் செய் என்று ஆணையிடவில்லை. விருப்பம் ஏற்பட்டுவிட்டால் அதுவே அரும்பாகி, மலராகி, காயாகி கனிந்து விடும்.

ஆறுவது சினம் : சினம் ஏற்பட்ட உடனே செயல்படாமல் கொஞ்சம் கொஞ்சமாக அடக்க முயல வேண்டும்.கோபத்தில் எதை எதையோ துாக்கி எறிகிறவர்கள், கோபத்தையே துாக்கி எறியும் பொறுமை காக்க வேண்டும். இப்படி ஆத்திச்சூடி எல்லாமே அமுதம் தான். அள்ளிப்பருகுங்கள்.

நட்பின் பயன் : நட்பிற்கு அடிப்படையாய்அமைவது அன்பு. அந்த அன்புக்கு அடிப்படையாக சில குணங்கள் இருக்கின்றன. அப்போது தான் நட்பு வளரும்.

ஞயம்பட உரை : நேர்பட வொழுகு, நன்றி மறவேல்வஞ்சகம் பேசேல், வெட்டெனப் பேசேல்

பழிப்பன பகரேல், கூடிப்பிரியேல்ஒருவருக்கு நல்ல நண்பன் கிடைத்துவிட்டால் அவருடைய அறிவு இரட்டிப்பாகிறது என்று சொல்லப்படுவது உண்டு. அதனையே அவ்வையார்,

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க

நல்லார் சொல் கேட்பதும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு

இணைந்து இருப்பதும் நன்றே.

மனிதரில் மூன்று நிலை : அவ்வையின் பாடல் ஒன்றில் பலாமரம், மாமரம், பாதிரி மரம் என்ற மூன்றும் உவமையாக ஆளப்பெற்றுள்ளன. பலாமரம் பூக்காமலே காய்க்கும் தன்மை உடையது. உயர்ந்த தன்மை உடையோர் தாம் செய்யும் உதவியை பிறருக்கு அறிவிக்காமலே செய்து முடிப்பர். இவர்களுக்கு பலாமரம் உவமையாகிறது.மாமரம், பூத்துக்காய்த்து கனி தரும் தன்மை உடையது. சிலர், தாம் செய்யும் உதவியை பிறருக்கு எடுத்துக்கூறி அதனை செய்வர்.

அதனால் மாமரம் இவர்களுக்கு உவமையாயிற்று.பாதிரிமரம் பூக்கும். ஆனால் காய்க்காத தன்மை உடையது. கீழ்மக்கள், பிறருக்கு உதவி செய்வதாக கூறி அதனைசெய்யாமல் தட்டிக்கழிப்பர். பூத்தும் கனி தராத பாதிரி மரம் இவர்களுக்கு உவமை ஆயிற்று.

''சொல்லாம லேபெரியர்;

சொல்லிச் செய்வர் சிறியர்;

சொல்லியும் செய்யார் கயவரே - நல்ல

குலாமலை வேற்கண்ணாய்!

கூறுவமை நாடின்

பலாமாவைப் பாதிரியை பார்!''

எனும் அவர் பாடல் கூறுகிறது.

மனிதப்பண்புகளை மரங்களின் இயல்போடு ஆராயும் அவ்வையாரின் ஆற்றல் பாராட்டுக்குரியது.

சாதி எனும் பகைக்கு மருந்து : விஞ்ஞானத்தின் விழுதுகள் விஸ்வரூபமாய் மனித வாழ்வில் ஊன்றி விட்ட இக்காலத்தில் சாதி வழக்குகளால் வாதித்து மோதிக்கொள்ளும் மூடத்தனம் மனிதனிடம் நோயாக ஒட்டிக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் வாக்கை மன வீட்டிற்குள் நுழைய விடாது, கொல்லைப்புறத்திலேயே போட்டு விட்டான் மனிதன். சாதிப் பாகுபாடுகளால் வாழ்வை சோதிக்கும் மனிதனுக்கு சவுக்கடி கொடுக்கிறார் அவ்வையார்.

''சாதி இரண்டொழிய வேறில்லை

சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையின் -

மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார்

இழி குலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி''

(நல்வழி:2)

பிறருக்கு கொடுத்து உதவுபவர் உயர்ந்த சாதியாவார்; பிறருக்கு கொடாதார் தாழ்ந்த சாதியாவார். இவை இரண்டன்றி வேறு சாதிகள் இல்லை. சாதிப் பாகுபாட்டை நீக்க ஒரே வழி, இந்த உலகத்தில்

எல்லாம் ஒன்று என்ற எண்ணம் உண்டாக வேண்டும்.

அவ்வையாரின் நகைச்சுவை : திருமண வீட்டு நெரிசலில் சாப்பிடாமல் சிரமப்பட்டு

திரும்பியதை, நகைச்சுவையோடு எடுத்துக்கூறுகிறார் அவ்வையார். கோலாகலமாக நடந்த பாண்டிய மன்னனின் வீட்டு திருமணத்தில் கலந்துக்கொண்டு திரும்பிய அவ்வை, ஒரு தெருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் சோர்வோடு அமர்ந்திருந்தார். அந்த வீட்டின் தலைவி, 'பாட்டி நீங்கள் பசியோடு இருப்பதை போல் தெரிகிறது. திருமண வீட்டில் விருந்து உண்ணவில்லையோ?' என்று கேட்டாள். அதற்கு பதில் சொல்லும் முகமாக அவ்வை இப்படி பாடினார்.

வண் தமிழைத் தேர்ந்த

வழுதி கல்யாணத்து

உண்ட பெருக்கம்

உரைக்கக்கேன் - அண்டி

நெருக் குண்டேன்,

தள்ளுண்டேன் நீள்பசியினாலே

சுருக் குண்டேன் சோறுண் டில்லேன்.

நான்கு கோடி பாடல்கள்

ஒரு ஊரில் ஒரு போலி வள்ளல் இருந்தான். கொடை கொடுப்பதாய் நடிப்பான். ஆனால் கொடுக்காமல் இருக்க சூழ்ச்சி செய்வான். நாலு கோடி கவி செய்தால்

அவருக்கு ஆயிரம் பொன் தருவதாக அறிவித்தான். பல புலவர்கள் முயன்று தோற்றுப்போனார்கள். அவ்வூருக்கு அவ்வையார் வந்தார். தன்னால் பாட முடியும் என்று

அறிவித்தார். போலி வள்ளலும் புலவர்களும் ஆச்சரியத்தோடு பார்க்க, பாட ஆரம்பித்தார்.

மதியார் முற்றும் மதித்தோருகால்

மிதியாமை கோடி பெறும்

உண்ணீர் உண்ணீர் என்று

உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார்

தம்மோடு

கூடுவதே கோடி பெறும்

கோடானு கோடி கொடுப்பினும் நாக்கு

கோடாமை கோடி பெறும்.

புலவர் எல்லாம் அவ்வையாரை போற்றி பாராட்டினர். போலி

வள்ளலும் ஆயிரம் பொன் கொடுக்க வேண்டியதாயிற்று. அன்றிலிருந்து இப்படி சூழ்ச்சி செய்வதை அவர் நிறுத்திக்கொண்டார்.

அவ்வையார் சென்ற துாது : தகடூர் நாட்டை ஆண்ட அதியமானும், அவ்வையும் நட்பு பாராட்டி வாழ்ந்தனர். அதியமான், அவ்வையை அரசவை புலவராகவும் பெருமைபடுத்தினான். காஞ்சியை ஆண்ட தொண்டைமான் என்ற அரசன், அதியமான் மீது போர் தொடுக்க விரும்பினான். ஆனால், தொண்டமானை வெல்லும் ஆற்றல் இருந்தும் போரை தவிர்க்க அதியமான் விரும்பினான்.

திருமுடிக்காரியிடம் போரிட்டு வென்ற அதியமான், அப்போரில் பல உயிர்கள் அழிந்ததால் மனம் வருத்தம் அடைந்தான். எனவே, போரை தவிர்க்க அவ்வையை துாதாக அனுப்பி சமாதானத்தை ஏற்படுத்த விரும்பினான். அவ்வையும் ஆர்வத்தோடு புறப்பட்டார். தொண்டமான், அவரை அன்போடு வரவேற்றான். தனது ஆட்சியின் சிறப்பை எடுத்துரைத்தான். தனது படைக்கல கொட்டிலை காண்பித்தான். அதை சுற்றி பார்த்த அவ்வையார், அவனை புகழ ஆரம்பித்தார்.

'மன்னா! உனது ஆயுத கொட்டிலில் உள்ள ஆயுதங்கள் எல்லாம் புத்தம் புதிதாக அழகாக

இருக்கின்றன. வேற்படை பொலிவுடன் இருக்கின்றன. வாள் படை, நெய் பூசப்பட்டு மாலையும் திகழ்கின்றன. மற்ற ஆயுதங்களும் புதிதாகவே திகழ்கின்றன'.

அவ்வை சொல்லச்சொல்ல தொண்டமான் பெருமையின்

உச்சிக்கே போனான். அதன் பின்னர் அவ்வை சொன்ன வார்த்தைகள்தான் அவரது துாதுத் திறனைக்காட்டியது.

'உன்னுடைய படைக்கல கொட்டில் போல அதியமான் படைக்கல கொட்டில் இல்லை. அடிக்கடி போரை சந்திப்பதால் நிலைகுலைந்து கிடக்கின்றன. ஆயுதங்கள் பழுதுபட்டு கிடக்கின்றன. வேல்கள் எல்லாம் முனை மழுங்கிக் கிடக்கின்றன. அடிக்கடி சீர் செய்ய உலக்களத்துக்கு சென்று வருகின்றன'.அவ்வை சொல்லச்சொல்ல தொண்டமானுக்கு அடி வயிறு

கலங்கியது. தம்மிடம் ஆயுதங்கள் பல இருந்தும் போர்ப் பயிற்சி

இல்லாமல் இருப்பதை சூசகமாக சுட்டிக்காட்டிய அவ்வையாரின் அறிவுத்திறனை எண்ணி வியந்தான். போர் தொடுக்கும் எண்ணத்தை கைவிட்டான்.புகழ்வது போல் புகழ்ந்து

பழித்துக்காட்டிய அவ்வையாரின் ஆற்றல் மெச்சத்தக்கது அல்லவா? இதோ பாடல்,

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிகந்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து

கடியுடை வாயில் நகரவ்வோஅவ்வே,(அங்கே) பகைகுத்தி கோடுநுாதி சிதைந்து

தொல்துறை குற்றல் மாதோ!''அவ்வையின் அமுதமொழிகளை அறிந்து மகிழ்வோம். வாழ்க்கையில்கடைபிடித்து வளம் பெறுவோம்.

பேராசிரியர் ரேவதி சுப்புலட்சுமி

உதவி பேராசிரியர்

செந்தமிழ்க்கல்லுாரி, மதுரை

94437 28028






      Dinamalar
      Follow us