தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நிழல்களின் முன்னோடிகள் இந்த நிஜங்கள் இன்று உலக நாடக தினம்

நிழல்களின் முன்னோடிகள் இந்த நிஜங்கள் இன்று உலக நாடக தினம்

நிழல்களின் முன்னோடிகள் இந்த நிஜங்கள் இன்று உலக நாடக தினம்


ADDED : மார் 26, 2018 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2018 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் நாடகத் துறையில் முன்னோடிகளாகவும் வெற்றியாளர்களாகவும் வாழ்ந்தவர்கள் மிகச் சிலரே! அவர்களுள் சங்கரதாஸ் சுவாமிகள், சி. கன்னையா, நவாப் ராஜமாணிக்கம், பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள், பாலாமணிஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.'நாடகப் பேராசிரியர்' சங்கரதாஸ் சுவாமிகள் தொழில்முறை நாடகக் குழுக்களின் வளர்ச்சிக்குக் காரணமானவர். இவர் நாடகத்தில் இசையை முதன்மைப்படுத்தினார். 1914ல் இவர் தோற்றுவித்த

சமரச சன்மார்க்க நாடக சபை மூலம் பல நல்ல நாடகப் பிரதிகளை உருவாக்கி நடத்தினார். தொழில் முறை நாடகக் குழுக்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க, பாலர் நாடக சபை தொடங்கினார். எம்.ஜி.ராமச்சந்திரன், பி.யு.சின்னப்பா, எம்.ஆர். ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏ.பி.நாகராஜன் முதலான நாடகக் கலைஞர்கள் உருவாக இவரது நாடகக்குழுவே காரணம்.

அரங்கப் பொருட்கள்


ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா என்ற பெயரில் நாடகக் குழுவைசி. கன்னையா உருவாக்கினார்.இவரது நாடகக் காட்சிகளில், மேடையிலேயே குதிரை, யானை, தேர், காளை முதலானவற்றைக் கொண்டு வந்துவிடுவார். அரசவை காட்சிகளில் இரண்டு துாதர்கள் நிற்க, அவர்களுக்குப் பின்னால் நிறைய 'கட் அவுட்' வைத்து

ஐம்பது பேர் நிற்பது போலக் காட்டிவிடுவார். அரிச்சந்திரா நாடகத்தில் மயானக் காட்சியில், பிணம்போல் உருவம் செய்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்வதைக் காட்டினார். இவரது குழுவில் நாற்பது அரங்கக்கலைஞர்கள் பணியாற்றினர். பத்து லாரி அளவிற்கு அரங்கப்பொருட்களை வைத்திருந்தார்.காட்சிச் சிறப்பிற்காகவேஇவரது நாடகங்களுக்குக் கூட்டம் அலைமோதும். நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் மக்கள் திரும்பினர். முன்பதிவு முறையையும் இவர்

ஏற்பாடு செய்தார். இவரதுதசாவதாரம் நாடகம் 1008 நாட்கள் நடத்தப் பெற்றது. நாடகம்சென்னையில் நடக்கும்போது 700 கி.மீ. தொலைவில் உள்ளதிருநெல்வேலியில் விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தந்திரக் காட்சிகள்


'பக்த ராம்தாஸ்' நாடகத்தில் நவாப்பாக ராஜமாணிக்கம்நடித்ததால், இவரை 'நவாப்' என்று அழைத்தனர். இவர் மதுரை பாலமீன ரஞ்சனி சபா மற்றும் மதுரை தேவி பால விநோத சங்கீத சபா ஆகிய பால நாடக சபைகள்நடத்தினார். மேடையில் இவர் உருவாக்கிக் காட்டிய தந்திரக் காட்சிகள் பலரையும் கவர்ந்தன. 'குமார விஜயம்' நாடகத்தில்முருகன் பிறப்பைக் காட்டுகையில், ஆறு சுடர்கள் ஆறு குழந்தைகளாக மாறுவதைக் காட்டினார். 'கிருஷ்ணலீலா' நாடகத்தில் குழந்தை கண்ணனைக் கூடையில் வைத்துத் துாக்கிக்கொண்டு, வசுதேவர் கொட்டும் மழையில் செல்வதும், ஐந்து தலை நாகம் வந்து குடை பிடிப்பதும் காட்டப்பட்டது. யமுனை நதி பிளந்து வழிவிடுவதும், நதி நீர் சுழித்து நகர்வதும், மீன்கள் துள்ளி விளையாடுவதும் காட்டப்பட்டது.'தசாவதாரம்' நாடகத்தில் சிறைக்காவலர்கள் மயங்கி இருக்க, இரும்புச் சாவி தானே நகர்ந்து பூட்டைத் திறப்பதும், கதவு

தானாகத் திறந்து கொள்வதும் காட்டப்பட்டது. 'ஏசுநாதர்'நாடகத்தில் கல்லறையிலிருந்து ஏசு உயிர்த்தெழும் காட்சி காட்டப்பட்டது. இவரது தந்திரக் காட்சி முறைகளை, ஆர்.எஸ். மனோகர், ஹெரான் ராமசாமி பின்பற்றினர். தந்திரக் காட்சிச் சிறப்பிற்காக, இவரது நாடகங்கள் ஆயிரம் முறைகளுக்கு மேல் நடத்தப்பட்டன. இவருடைய ராமாயண நாடகம் நடந்தபொழுது எஸ்.எஸ். வாசன், தம்முடைய 'ஒளவையார்' திரைப்படத்தை வெளியிட்டால் கூட்டம் வராது என்பதற்காக, வெளியிடாமல் வைத்திருந்தார்.

புதுமையும் சுருக்கமும்


'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார், பயில்முறை நாடகக் குழுவை உருவாக்கி அவ்வகையான குழுக்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தவர். இவருடைய 'சுகுண விலாச சபை' இதற்கு முன்னோடியாகஅமைந்தது. பார்சி, மராட்டி, இந்துஸ்தானி நாடகக் குழுக்கள் நடத்தும் முறையை அறிந்து, அதே போன்று தமிழ் நாடகங்களை எழுதி இயக்கினார். பத்து மணி நேரம் என்று நடந்துகொண்டிருந்த நாடகத்தை ஐந்து மணி நேரத்தில் முடியுமாறு செய்தார்.சமுதாயத்தில் பரவலாக வழங்கி

வரும் பழைய கதையின் மூலக் கருத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டு நகைச்சுவையாக எழுதப்படுவது எதிர்க்கதை நாடகம். இதை ஏட்டிக்குப் போட்டி நாடகம் என்றும் கூறலாம். இதற்காக அரிச்சந்திரன் கதையை எடுத்துச் 'சந்திரஹரி' என்று மாற்றி எழுதினார். அரிச்சந்திரன் கதை எந்த நிலையிலும் பொய் பேசாத ஒருவனைப் பற்றியது. பம்மல் சம்பந்தனாரின் 'சந்திரஹரி', எந்த நிலையிலும் பொய்யே பேசுகிற ஒருவனைப் பற்றிய வேடிக்கைக் கதை.தேசியவாதிகளான டி.கே.எஸ்.சகோதரர்கள், மேடையமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறிப்பிடத் தக்கன. முகப்புத் திரைக்குப் பின்னுள்ள பின்னணித் திரைகளை வரிசைப்படுத்தி வைக்கும் முறையில் ஓர் ஒழுங்கினைப் புகுத்தினார்.

ஒலிவாங்கியிலிருந்து மூன்றடி துாரத்தில் தெருத்திரை இருக்கும். இடையில் காடு, அரண்மனை, தர்பார் எனப் பல திரைகள் இருக்கும்.

நாடகப் பெண்மணிகள்


19ஆம் நுாற்றாண்டின் இறுதியில் ஆண்கள், பெண்வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலை மாறி பெண்கள் மேடையேறி நடிக்க வந்தனர். பி.பி.ஜானகி அம்மாள், பி.ரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி.ராஜத்தம்மாள் போன்றோர் வரிசையில், பாலாமணி அம்மாள் குறிப்பிடத்

தக்கவர். அந்தக் காலக்கட்டத்தில் புகழ்வாய்ந்து இருந்த நாடக சபைகள் மொத்தம் அறுபத்து ஒன்பது. அவற்றில் ஆறு சபைகளைப் பெண்களே ஏற்று நடத்திவந்தனர். அவற்றுள் ஒன்று பாலாமணி, அவருடைய சகோதரி ராஜாம்பாள் இணைந்து நடத்திய 'பாலாமணி அம்மாள் நாடக கம்பெனி'. இதில் முழுவதும் பெண்களே (70 பேர்) இடம் பெற்றிருந்தனர். திருமணம், தன் நாடக வாழ்வைப் பாதிக்கும் என்பதால் பாலாமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் காசி விசுவநாத முதலியாரின் 'டம்பாச்சாரி விலாசத்தை' (தமிழின் முதல் சமூக நாடகம்) மீண்டும் மீண்டும் அரங்கேற்றிப் புகழும் பெருஞ் செல்வமும் ஈட்டினார்.அக்காலத்திலிருந்த பெண்களின் நாடக சபைகளில் இவரது சபைதான் மிகவும் புகழ்பெற்றது. மக்கள் 'நாடக அரசி' என்றுமெச்சினர். 1880 - 1890 களில் அவர் மிகப் புகழோடு இருந்தார். நாடகங்களால் ஈட்டிய பணத்தில், பெரும் பகுதியை கோயில் திருப்பணிகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்குமே செலவிட்டார். குடந்தை கும்பேஸ்வரர் கோயில் திருமண மண்டபம் இவர் பெயரில் உள்ளது.

பாலாமணியின் பெருமை


பாலாமணி நாடகங்களைக் காண பார்வையாளர்கள் பெருமளவில் கூடுவர். கும்பகோணத்தில் இவரது நாடகம் இரவு 9:30 மணிக்கு ஆரம்பமாகும். இதற்காகவே சிறப்பு ரயில் ஒன்று 40 கி.மீ., தொலைவில் உள்ள மாயவரத்திலிருந்து விடப்பட்டது.''கும்பகோணத்தில், பாலாமணியின் வீடு பெரிய அரண்மனை போல இருக்கும். வீட்டில், ஆண்களும், பெண்களுமாக 50, 60 பணியாட்கள் இருப்பர். கல்யாண வீடு போல தினமும் சமையல் நடக்கும். நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் தான் பாலாமணி போவார், வருவார். வெல்வெட் திரைச் சீலைகளால் அதன் பக்கவாட்டுப் பகுதிகள் மூடப்பட்டிருக்கும். வண்டியைக் காண்பதன் மூலமே மானசீகமாக பாலாமணியைப் பார்த்ததுபோல இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் பெருமூச்சு விடுவர். அவரை நாடகங்களில் ஒப்பனையுடன்தானே பார்க்கிறோம். நேராகப் பார்க்க வேண்டுமென்று நீண்ட துார கிராமங்களிலிருந்து மக்கள் மாட்டு வண்டிகளிலும், கால்நடையாகவும்

வந்து, அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பர். இப்படியே தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள் நிற்பர். பாலாமணியின் வீட்டு முன்புறம் மாடியில் ஒரு பெரிய உப்பரிகை இருக்கும். அங்குச் சென்று பாலாமணி தன்னுடைய தலைக் கேசத்தை கோதி, அது காய்வதற்காக அங்குமிங்கும் நடப்பார். வாசலில் நின்று கொண்டிருக்கும் மக்கள், பாலாமணியை 'வானிலிருந்து இறங்கிய தேவதை' என நினைத்து, திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பர்,'' என நடிகர் எம்.கே.ராதா தன் நுாலில் குறிப்பிட்டுள்ளார்.புகழும் பெருஞ் செல்வமும் கைவரப்பெற்ற பாலாமணி, எதிர்காலத்திற்கென ஏதும் சேமித்து வைக்கவில்லை. ஆடம்பரத்திலும் நன்கொடைகளிலும் அவை கரைந்தன. இறுதியில் நோய்வாய்ப்பட்டு மதுரையில் குடிசையில் தங்கினார். நாடகக் குழுவில் இருந்த மற்ற பெண்கள் எல்லாம் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர். அறுபத்து ஐந்து வயதில் இறந்தார். பெரும்புகழுடையதும் அவலமான முடிவினையுடையதுமான வாழ்க்கை, நாடகப் பெண் நடிகை

களுக்கு மட்டுமல்ல திரைப்படப் பெண் நட்சத்திரங்களுக்கும் வாய்த்து வருகிறது. ஒட்டுமொத்த கலைஞர்களின் வாழ்வே இப்படித்தானோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.

-முனைவர் ப. சரவணன்தமிழாசிரியர், லட்சுமி பள்ளி, மதுரை. 98945 41523

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us