ராணுவம், தேச நலனுக்கு எதிராக சினிமா பிரபலங்கள் ஆவேச பேச்சு
ராணுவம், தேச நலனுக்கு எதிராக சினிமா பிரபலங்கள் ஆவேச பேச்சு
UPDATED : ஏப் 12, 2018 12:55 AM
ADDED : ஏப் 12, 2018 12:53 AM

சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சினிமா பிரபலங்கள், பகிரங்க மிரட்டல் விடுத்தனர். ராணுவம் தேச நலனுக்கு எதிராக ஆவேசமாகப் பேசியதோடு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் துவேஷத்தை வெளிப்படுத்தினர்.
@Image@
இயக்குனர்கள் உள்ளிட்ட, சினிமா பிரபலங்கள் இணைந்து, 'தமிழர் கலை இலக்கிய பண்பாடு பேரவை' என்ற அமைப்பை துவக்கி உள்ளனர். அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும், நேற்று முன்தினம், சென்னையில் போராட்டம் நடத்தினர். அப்போது, போலீசார் தாக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் நேற்று, பத்திரிகையாளர்களை சந்தித்த, திரையுலக பிரபலங்கள், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தேச நலனுக்கு எதிராகவும் பேசினர். அவர்களுடைய பேட்டி, தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் அளித்த பேட்டி விபரம்:
பாரதிராஜா: நேற்று முன்தினம் நடந்தது, வன்முறை அல்ல: அறவழியில் சென்றோம். நாங்கள் செய்தது, எதிர்வினை தான். அதை பூதாகரமாக காட்டக் கூடாது. பிரதமருக்கு, கறுப்பு கொடி காட்டுவது நிச்சயம். அவர், விமானத்தில் வந்தாலும், ஹெலிகாப்டரில் பறந்தாலும், நம் மண்ணில் கால் வைத்து தான் @nextcolumn@ஆக வேண்டும்; அப்போது, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால், அவருக்கு வரவேற்பு கொடுத்திருப்போம்.
ஐ.பி.எல்., கிரிக்கெட்டுக்கு எதிராக, 20ம் தேதி, எங்கள் போராட்டம், இன்னும் தீவிரமடையும். ரஜினி, வெறும் வாயை மட்டும் அசைக்கிறார். பின்னால் இருந்து, யாரோ, 'டப்பிங்' பேசுகின்றனர். எங்களை, 'அறவழியில் போராட வேண்டாம்; ஆயுதம் ஏந்தி வா' என, மத்திய, மாநில அரசுகளே துாண்டி விடுகின்றன.
அமீர்: போராட, களத்தில் இறங்கி உள்ளோம். எந்த வழியில் எல்லாம் போராட முடியுமோ, அந்த வழியில் எல்லாம் போராடுவோம். ஆயுதம் ஏந்தி போராடும் காலம் வந்தால், போராடித் தான் ஆக வேண்டும்.
கவுதமன்: நாங்கள், நீர் வேண்டும் என்கிறோம்; 'நீட்' வேண்டாம் என்கிறோம். நீரை மறுத்து, விவசாயிகளை அழிக்கிறீர்கள். 'நீட்' தந்து, மாணவ -- மாணவியரை அழிக்கிறீர்கள். 'நீட்' தேர்வுக்கு எதிராக, ஏப்., 19ம் தேதி, கோட்டையை இழுத்து மூடுவோம். கவர்னர் மாளிகையை இழுத்து மூடுவோம். என்ன திமிர் இருந்தால், இவ்வளவு போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, 'ஐ.பி.எல்., போட்டி நடத்துவோம்' என்பீர்கள்.
தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடக்கிறது. அதற்காக, எடுத்து வரப்பட்டுள்ள ராணுவ தளவாடங்களை, திருப்பி எடுத்துச் செல்லப் போவதில்லை. அவற்றை, தமிழக மக்களுக்கு எதிராக திருப்புவர். அந்த யுத்தத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
இப்போதைக்கு, ஜனநாயக யுத்தம் செய்வோம். தேவைப்பட்டால், எங்கள்@nextcolumn@ மண்ணை காக்க, எதை எடுக்க வேண்டுமோ, அது, இந்த மண்ணில் நடக்கும். இன்னும் அறவழியை நம்புகிறோம். எங்கள் உணர்வை புரிந்து கொள்ளுங்கள். சூரப்பாவை திரும்ப பெற்றுக் கொள்வது நல்லது. இல்லையெனில், மாணவர்கள் அப்புறப்படுத்துவர்; இது எச்சரிக்கை.
சீமான்: போலீசாரை, நான் தாக்கவில்லை. அவர்களை காப்பாற்றவே செய்தேன். யாரையும் தாக்க வேண்டும் என்பது, எங்கள் நோக்கமல்ல. போலீசாரை தாக்கியதை, வன்முறை எனக் கூறும் ரஜினி, எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, ஏன் வன்முறை என, கூறவில்லை?
மணியரசன்: கர்நாடகாவில், இனவெறி உள்ளது. காங்கிரசாக இருந்தாலும், பா.ஜ.,வாக இருந்தாலும், அவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகின்றன. தமிழிசை, பிரதமர் வாசலில் கூட போய் நிற்க முடியாது. பொய் வழக்கில், சீமானை கைது செய்ய வந்தால், போராட்டத்தில் பங்கேற்ற, 10 ஆயிரம் பேரையும் கைது செய்யுங்கள். சீமானை, கைது செய்ய விட மாட்டோம்; அவர், தனி மனிதர் கிடையாது.
தனியரசு: பிரதமர் தரையிறங்கும்போது, விமான நிலையத்தை சுற்றிலும் கறுப்பு கொடி இருக்கும். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும், கொதித்து போயுள்ள சூழ்நிலையில், தமிழகத்திற்கு மோடி வரக் கூடாது. ரஜினி, பெரிய ஆளே இல்லை. அவரை பற்றி பேசுவது, தேவையற்றது.
கருணாஸ்: கிரிக்கெட் போட்டி, சூதாட்டம் தானே! ஐ.பி.எல்., போட்டிகள், இனி சென்னையில் நடக்காது. எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். இந்த போராட்டம், ஒட்டுமொத்த தமிழ் சந்ததிக்கான போராட்டம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
