UPDATED : ஜன 15, 2019 05:20 PM
ADDED : ஜன 15, 2019 04:26 PM
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக தோல்வி அடையும் என தெரிந்து கொண்டதால், முதல்வர் மீது திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்துவதாக அதிமுகவின் கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
கோடநாடு விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ காரணமாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், முதல்வர் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து புகார் அளித்தார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் எம்பி வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கோட நாடு விவகாரம் தொடர்பாக கவர்னரை சந்தித்து பேசினர்.
பின்னர் கே.பி.முனுசாமி கூறியதாவது: முதல்வர் மீது அரசியல் நோக்கத்துடன் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. முதல்வர் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க புகார் சொல்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீதான குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. நாங்கள் எங்கள் தரப்பில், கவர்னரை சந்தித்து விளக்கங்களை அளித்து உள்ளோம். வீடியோ பின்னணியில் உள்ள சதியை கவர்னரிடம் விளக்கினோம். தேர்தலில் திமுக தோல்வியடையும் என தெரிந்த பின்னர் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றனர். கருணாநிதி போல் ஸ்டாலினும் பொய் குற்றச்சாட்டுகளை சொல்கிறார். கோடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பதை சசிகலா தான் கூறி வேண்டும். முதல்வர் மீது குற்றம் சுமத்தினால், அரசு சும்மா இருக்காது. கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
