சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு
ADDED : ஜூலை 31, 2020 11:31 PM

சென்னை : சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி, 80, உடல்நல குறைவால் நேற்று காலமானார்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், 1940 ஜூலை, 31ல் பிறந்த சா.கந்தசாமி, 1968ல் வெளியான, 'சாயாவனம்' என்ற, குறுநாவல் வழியாக, தமிழ் எழுத்துலகில் அறிமுகமானார். இவரின், 'விசாரணை கமிஷன்' என்ற புதினம், 1998ல், சாகித்ய அகாடமி விருது பெற்றது. இவர் நாவல், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். 'கசடதபற' என்ற சிற்றிதழை நடத்தினார். குறும்பட இயக்குனராகவும் திகழ்ந்தார்.'தென்னிந்திய காவல் தெய்வங்கள்' என்ற இவரது ஆய்வு, துார்தர்ஷனில் ஆவணப்படமாக வெளியானது.இவரின், 'நிகழ்காலத்திற்கு முன்' என்ற நுால், தமிழக அரசின் விருது பெற்றது.
சாகித்ய அகாடமியின் ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, நேற்று காலை மரணம்அடைந்தார்.இவருக்கு, ரோகிணி என்ற மனைவியும், இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். சா.கந்தசாமியின் மறைவுக்கு, அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
