கோவைக்கு தேவை முழு சுற்றுச்சாலை: மத்திய, மாநில அரசுகள் மறந்த வேலை!
கோவைக்கு தேவை முழு சுற்றுச்சாலை: மத்திய, மாநில அரசுகள் மறந்த வேலை!
UPDATED : ஆக 17, 2021 08:11 AM
ADDED : ஆக 17, 2021 08:06 AM

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முழுமையான ரிங் ரோட்டை அமைக்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவையை ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் கடக்கின்றன. கேரளாவிலிருந்து சென்னை, சேலம் மற்றும் கர்நாடகாவுக்கும், அந்தப் பகுதிகளிலிருந்து கேரளாவுக்கும் செல்வதற்கான முக்கியமான வழித்தடமாக கோவை உள்ளது. ஆனால், முழுமையான சுற்றுச்சாலை (ரிங் ரோடு) இல்லை.
அவிநாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் பாலக்காடு ரோட்டை இணைக்கும் எல் அண்ட் டி பை-பாஸ் ரோடு மட்டுமே, இந்நகருக்கான ஒரே புறவழிச்சாலை. அனைத்து வாகனங்களும் நகருக்குள் வரவேண்டியிருப்பதால், போக்குவரத்து நெரிசலும், விபத்தும் அதிகமாகி வருகிறது.
இதற்குத் தீர்வு காண, 2010ம் ஆண்டில், தி.மு.க.,ஆட்சியின் போது, கோவைக்கு மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடந்தஆண்டு தான் இதற்கான பணிகள் வேகமெடுத்தன. மொத்தம் மூன்று கட்டங்களாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நகரின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை இணைக்கும் இந்த பை-பாஸ் ரோடு, மதுக்கரையில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மொத்தம் 33 கி.மீ.,க்கு அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, 111.8 கி.மீ., இரண்டாம் கட்டத்தில் 12.1 கி.மீ., மூன்றாம் கட்டமாக 8.53 கி.மீ., என பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இவற்றில், மேற்கு புறவழிச்சாலை மட்டுமே, மாநில நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்படுகிறது. உத்தேச கிழக்கு புறவழிச்சாலை, கோவை-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையையும் (எண்:181), கோவை-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும் (எண்:544) இணைக்கும் ரோடு (நரசிம்ம நாயக்கன் பாளையம்-நீலம்பூர்) என்பதால், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறைதான் இதை அமைக்க வேண்டும்.
அதேபோன்று, தற்போது இரு வழிச்சாலையாகவுள்ள எல் அண்ட் டி பை-பாஸ் ரோட்டை (நீலம்பூர்-மதுக்கரை) நான்கு அல்லது ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டிய பொறுப்பும், மத்திய அரசிடமே உள்ளது.கோவை நகருக்கு முழுமையான ரிங் ரோடு கிடைக்க வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.
அதிலும் மத்திய அரசின் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது.கோவையில் உள்ள பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ., வுடன், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகன், மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர், கோவைக்கு மத்திய அரசு செய்ய வேண்டிய திட்டங்களை வலியுறுத்த வேண்டுமென்று தொழில் அமைப்பினர் எதிர்பார்க்கின்றனர்.
என்.எச்., ரோடு... என்னாச்சு விரிவாக்கம்?
கோவை-சென்னை, கோவை-கொச்சி (என்.எச்.544), கோவை-மைசூரு (என்.எச்.948), கோவை-ஊட்டி (என்.எச்.181), கோவை-மதுரை (என்.எச்.83), கோவை-திருச்சி (என்.எச். 81) என ஆறு தேசிய நெடுஞ்சாலைகள், கோவை நகரைக் கடக்கின்றன. இவற்றில், கோவையில் இருந்து திருச்சி மற்றும் மதுரை செல்லும் ரோடுகளும், மைசூரு செல்லும் சத்தி ரோடும் மிகவும் குறுகலாகவுள்ளன. இந்த ரோடுகளையும் போர்க்கால அடிப்படையில், விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன.
-நமது நிருபர்-