ADDED : அக் 13, 2021 09:27 PM

சென்னை:எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள, 'வெண் முரசு' நாவலின் ஆவணப் பட இசை தொகுப்பை, இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டார்.
மிகப்பெரிய வெண் முரசு நாவலை ஆவணப் படமாக்கி உள்ளனர். அதன் இசை தொகுப்பு வெளியீட்டு விழா இணையவழியில் நடந்தது. இதில் இயக்குனர் மணிரத்னம், வசந்தபான், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பாடகி சைந்தவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இசை தொகுப்பை வெளியிட்டு மணிரத்னம் பேசியதாவதுஒரு நாவலுக்கு ஆவணப்படம் மற்றும் பாடல்கள் இசைக்கப்படுவது புதுமை; எல்லைகள் தாண்டிய முயற்சி. அசாத்தியமான படைப்பான வெண்முரசுக்கு இசையமைத்த ராஜன் சோமசுந்தரத்திற்கு வாழ்த்துகள். என் வாழ்வில் சந்தித்த கலைஞர்களில் இருவர் முதன்மையானவர்கள்; ஒருவர் இளையராஜா; மற்றொருவர் எழுத்தாளர் ஜெயமோகன். ஆவணப்படத்தை இயக்கிய குழுவினருக்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசுகையில், ''வியாசருக்கு பின், மகாபாரதத்தை முழுமையாக எழுதியவர் ஜெயமோகன். 60 லட்சம் சொற்களுக்கு மேல், புனைவுகளில் ஜெயமோகன் பயன்படுத்திஇருப்பார். ''வெண் முரசில் வரும் ஒரு வார்த்தை ஒரு முறை என கணக்கிட்டு, அகர வரிசைப்படி சொல்லடைவு வெளியிட வேண்டும்,'' என்றார்.