ADDED : டிச 22, 2021 12:11 AM
சென்னை:கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, தனி நபரும் புகார் அளிக்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக, தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
அத்துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, கம்பிவேலி அமைக்கும் பணி நடக்கிறது.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்க, சம்பந்தப்பட்ட கோவில் அறங்காவலர்கள், தக்கார் மற்றும் செயல் அலுவலர்களுக்கு துறை சார்பில்அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு குறித்து, தனி நபர்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து, தனி நபர்கள் அளிக்கும் புகாருக்கு, தேவையான ஆவணங்களையும், முழுமையான ஒத்துழைப்பையும், காவல்துறைக்கு வழங்க வேண்டும் என, கோவில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
