ADDED : செப் 12, 2010 11:20 PM

சென்னை : பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஸ்வர்ணலதா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நேற்று இறந்தார்.
இவருக்கு வயது 37. இறுதிச் சடங்கு இன்று காலை சென்னையில் நடக்கிறது. கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த ஸ்வர்ணலதா, கர்நாடக இசை பயின்று 14 வயதிலிருந்தே மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். 1989ம் ஆண்டு, 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, உருது, படகா மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.
'சத்ரியன்' படத்தில் இளையராஜா இசையில், 'மாலையில் யாரோ மனதோடு பேச,' 'சின்ன தம்பி' படத்தில் 'போவோமா ஊர்கோலம்,' 'கருதம்மா' படத்தில், 'போறாளே பொண்ணுத்தாயி' பாடல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன. வீரா, காதலன், என் மன வானில் உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் பாடியுள்ளார்.
'போறாளே பொண்ணுத்தாயி' பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஸ்வர்ணலதா திருமணம் செய்து கொள்ளவில்லை. பெற்றோர் செருகுட்டி - கல்யாணி இறந்து விட்டதால், சென்னையில் உள்ள சகோதரர் வீட்டில் ஸ்வர்ணலதா இருந்து வந்தார். நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்வர்ணலதா நேற்று காலை இறந்தார்.
அவரது உடல், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஸ்வர்ணலதாவின் இறுதிச் சடங்கு, போரூரில் உள்ள மின்சார சுடுகாட்டில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.
