ADDED : நவ 30, 2013 11:03 PM
நாய் கடித்தால் ஏற்படும் இறப்பு வேதனைக்குரிய விஷயம். வெறிநாய் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும். விழிப்புணர்வு இன்மையே தேவையற்ற இறப்புக்கு காரணம்.
வெறிநோய் மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?வீட்டில் வளர்க்கும் நாய், சிறிய குட்டி நாய், தெருநாய் என எந்த நாய் கடித்தாலும் அதன் பற்கள் நம் உடம்பில் கீறலை ஏற்படுத்துகிறது. நாயின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீர், அக்காயத்தின் வழியாக 'ரேபிஸ்' எனப்படும் வெறிநோய் கிருமிகளை உள்ளே செலுத்துகிறது. அவை தோல் மற்றும் தசை திசுக்களில் பெருக்கமடைந்து மூளையை அடைகின்றன. காயமடையும் இடத்தைப் பொறுத்து, அக்கிருமிகள் வேகமாக அல்லது மெதுவாக மூளையை சென்று அடையும். அப்போது நோயின் பாதிப்பு உடனே ஏற்படும். கால்கள் எனில் மெதுவாகவும், கைகளில் கடித்தால் வேகமாக மூளையைச் சென்று அடையும். நாய்க் கடிதவுடன், வெறிநோய் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பின் அட்டவணைப்படி தடுப்பூசி அளிக்க வேண்டும்.
கடித்தது சாதாரண நாயா, வெறிநாயா என பார்த்துத்தான் தடுப்பூசி போட வேண்டுமா?கடித்தது வெறிநாயாக இருந்தாலும், சாதாரண நாயாக இருந்தாலும் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும். ஏனெனில் நாம் வளர்க்கும் சாதாரண நாய், குட்டிநாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) தாக்கம் இருப்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை.
நாய்க் கடித்ததும் உடனே என்ன செய்ய வேண்டும்?முதல் நோக்கம் கிருமிகளின் எண்ணிக்கையை குறைப்பதாக இருக்க வேண்டும். இதற்கு நாய்க் கடித்தவுடன், கடிபட்ட இடத்தை ஓடும் நீரில் அதாவது குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், நன்கு ரத்தம் வெளியேறும்வரை கழுவ வேண்டும். கழுவும்போது 'ஆல்கஹால் செட்ரி மைடு கார்பாலிக் அமிலம்' அல்லது சோப்புகளை உபயோகித்தால், கிருமிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். உடனே மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவது மட்டும்தான் உயிரைக் காப்பாற்றும்.
ஒருமுறை தடுப்பூசி போட வேண்டுமா அல்லது தொடர்ந்து போட வேண்டுமா?நாய்க்கடித்த சிறிது நேரத்திலேயே தடுப்பூசி போட்டுவிட வேண்டும். இதை '0' நாள் என்பர். பின் 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என, 5 தடவை தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு முன்னும், பின்னும் கடிபட்ட இடத்தை ஆல்கஹால் அல்லது டிங்சர் வைத்து சுத்தம் செய்யக் கூடாது. ஏனெனில், அது, தடுப்பூசியில் உள்ள ரேபிஸ் எதிர்ப்பு கிருமிகளை அழித்துவிடும்.
நாய் கடித்தவுடன் அந்த நாயை 10 நாட்களுக்கு நம் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமா?கடித்தது வெறிநாயாக இருந்தால் 10 நாட்களில் வெறி நோய்க்கான அறிகுறிகள் தென்படும். எஜமானரின் கட்டளைக்கு நாய் கீழ்ப்படியாது. கண்ணில் பார்க்கும் அனைத்து உயிரற்ற பொருட்களையும் கடித்தல், வழக்கத்துக்கு மாறாக குரல் எழுப்புதல், உணவு எடுத்துக் கொள்ளாமை, தண்ணீரைப் பார்த்தால் ஒவ்வாமை, அதிக உமிழ்நீர் சுரத்தல், தாடை தொங்கி விடுதல், தண்ணீரை விழுங்க முடியாமல் போவது, பின்கால்களில் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் அந்த நாய்க்கு, கடித்த 10 நாட்களில் ஏற்பட்டால் வெறிநோய் தாக்கப்பட்டு இருப்பது நிச்சயம். இதற்காக 10 நாட்களுக்கு காத்திராமல், கடித்த அன்றே தடுப்பூசி போட அரம்பித்துவிட வேண்டும். முதல் தடுப்பூசி மட்டும் போட்டுவிட்டு, நாம் தடுப்பூசி போட்டுவிட்டோம் என நிறுத்திவிடக் கூடாது. நாய் கடித்தவுடன் வெறிநோய் தடுப்பூசிபோடுவது மட்டுமே உயிரை காக்கும். -டாக்டர் முருகானந்தன்,மதுரை, 94435 57579
