பாக்., உளவாளிகள் தங்கிய நகரங்களில் என்.ஐ.ஏ., விசாரணை
பாக்., உளவாளிகள் தங்கிய நகரங்களில் என்.ஐ.ஏ., விசாரணை
ADDED : மே 20, 2025 05:03 AM

சென்னை ; சென்னை மற்றும் தஞ்சாவூரில், 10 ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தான் உளவாளிகள் தங்கி இருந்த பகுதிகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2014ல், சென்னை மண்ணடியில் பதுங்கி இருந்த, பாகிஸ்தான் உளவாளி ஜாஹிர் உசேன், 35, கூட்டாளிகள் சிவபாலன், 40; சலீம், 35; ரபீக், 32 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவல்படி, சென்னை சாலிகிராமம் முத்தமிழ் நகரில் தங்கி இருந்த அருண் செல்வராசன் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், இலங்கையை சேர்ந்த ஜாஹிர் உசேன், அருண் செல்வராசன் ஆகியோர், அந்த நாட்டில் உள்ள, பாக்., துணை துாதரக அதிகாரிகள் சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோரால் மூளைச்சலவை செய்யப்பட்டு, தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அருண் செல்வராசன், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனம் நடத்துபவர் போல பதுங்கி இருந்தார்.
அவரிடம் பாக்., உளவாளிகளின் மொபைல் போன் எண்கள், லேப் டாப்பில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம், பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையம், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் உள்ளிட்ட இடங்களின் படங்கள் மற்றும் 'ட்ரோன்' வாயிலாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் இருந்தன.
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில், பாக்., அதிகாரிகளை சந்தித்து, தமிழகத்தில் திரட்டிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்ததாகவும், அருண் செல்வராசன் வாக்குமூலம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், பாக்., உளவாளிகள் தங்கி இருந்த, சென்னை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, இந்த விசாரணை நடக்கிறது. உளவாளிகள் படம் மற்றும் வீடியோ எடுத்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு நடக்கிறது. அருண் செல்வராசன் மற்றும் ஜாஹிர் உசேன் ஆகியோருக்கு, ஏதாவது ஒரு விதத்தில் உதவி செய்த நபர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.