கொலையாளிகளுக்கு அடைக்கலம்; 16 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை
கொலையாளிகளுக்கு அடைக்கலம்; 16 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை
ADDED : டிச 05, 2024 11:56 PM
சென்னை : கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டரு; பா.ஜ., நிர்வாகி. இவர், 2022 ஜூலை, 26ல், தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., என்ற பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகினறனர். கொலையாளிகளாக, 23 பேரை அடையாளம் கண்டுள்ளனர்; 19 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.
அதன் தொடர் நடவடிக்கையாக, பிரவீன் நெட்டருவை கொன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பற்றி துப்பு துலக்கி வருகின்றனர்.
அதற்காக, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில், 16க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில், வாடகை வீட்டில் வசிப்பவர் முகமது ஆசிம், 39; தரை விரிப்புகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது வீட்டில் நேற்று காலை என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஐந்து பேர் சோதனை நடத்தினர்.
இதற்கு முன், முகமது ஆசிம் தங்கசாலை பகுதியில் குடியிருந்துள்ளார். அப்போது தான், பிரவீன் நெட்டரு கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, அவரை அழைத்து சென்றனர்.
இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில், 2019ல், பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், ஐந்து பேரில், நவ., 15ல், முகமது அலி ஜின்னா என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து, கூட்டாளிகள் நான்கு பேர் எங்கே என்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று விசாரித்தனர்.
அந்த நான்கு பேர் குறித்து, பொது மக்கள் துப்பு கொடுத்தால், 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.