நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: ஒருவர் பலி; 43 இடங்களில் மரங்கள் சாய்ந்தன!
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: ஒருவர் பலி; 43 இடங்களில் மரங்கள் சாய்ந்தன!
ADDED : மே 26, 2025 04:56 PM

நீலகிரி: விடாது பெய்யும் கனமழைக்கு நீலகிரியில் ஒருவர் பலியாகி உள்ளார். 43 இடங்களில் மரம் சரிந்து விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்துக்கு இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பருவமழை முன் கூட்டியே ஆரம்பித்துள்ளதால் நீலகிரியில் 2 நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது.
கூடலூர், பந்தலூர்,அவலாஞ்சி என பல பகுதிகளில் இடைவிடாது மழை கொட்டிய வண்ணம் உள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் மண் சரிவு காணப்படுகிறது. கூடலூர் அருகே நாயக்கன்சோலை என்ற பகுதியில் வீடு ஒன்றின் முன் இருந்த மண் சரிந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் இல்லை.
மண் சரிவு குறித்து அறிந்த உள்ளூர் மக்கள், நகராட்சி ஊழியர்கள் அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். கூடலூரில் பெய்யும் கனமழையால் 300 வாழைமரங்கள் சாய்ந்துள்ளன. அதை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொடரும் கனமழையால் மொத்தம் 43 இடங்களில் மரம் சரிந்து விழுந்துள்ளன. மழைக்கு ஒருவர் பலியாகி உள்ளார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறு நாளும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நீலகிரியில் சுற்றுலா தலங்கள் முன்கூட்டியே மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.