நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ADDED : ஜூன் 17, 2025 01:50 PM

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு வாரம் கடந்தும் மழை நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. உதகை எமரால்டு சாலையில் ராட்சத மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. அப்போது மின் கம்பம் மீது சாய்ந்ததால் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
கப்பாலா, சின்கோனா பகுதிகளிலும் மழையின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் சாய்ந்தன. தொடர் மழை எதிரொலியாக பாதுகாப்பு கருதி சுற்றுலா தளங்கள் 2வது நாளாக மூடப்ட்டு உள்ளன.
நீலகிரியை போன்று, கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. நகர் பகுதிகளிலும், புறநகரிலும் பல மணி நேரம் மழை விடாமல் பெய்தது. மழை காரணமாக சில இடங்களில் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டது.
இந் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
நாளைய தினம் (ஜூன் 18) நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.