கேரளாவில் பரவும் 'நிபா' வைரஸ் பழங்களை கழுவி சாப்பிட அறிவுறுத்தல்
கேரளாவில் பரவும் 'நிபா' வைரஸ் பழங்களை கழுவி சாப்பிட அறிவுறுத்தல்
UPDATED : ஜூலை 11, 2025 12:40 AM
ADDED : ஜூலை 10, 2025 10:49 PM

சென்னை:கேரளாவில், 'நிபா' வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழக மக்கள், பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்திலும் நோய் பரவல் நிலையை பொது சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது.
தற்போது வரை தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லையென்றாலும், பதற்றமின்றி, விழிப்புடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிக்கை:
நிபா வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் நோய் தொற்று. குறிப்பாக பழ வகை வவ்வால்கள், பன்றி போன்றவற்றில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
வவ்வால்களின் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி தொடர்பு கொள்வதன் வாயிலாகவோ, நோய் தொற்று பரவுகிறது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, துாக்கமின்மை, மூச்சு திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளதா என, மக்கள் கவனிக்க வேண்டும்.
கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வந்தால் அல்லது நோய் பாதித்த நபருடன் தொடர்பு கொண்ட பின், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
கழுவப்படாத அல்லது கீழே விழுந்த பழங்களை சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன், அனைத்து பழங்களையும் நன்கு கழுவுவதுடன், சோப்பால் கைகளையும் கழுவ வேண்டும்.
பொது சுகாதாரத் துறையால், எல்லை மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து செயல்பட மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு உள்ளதால், மக்கள் பீதி அடைய வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

