பிரதமர் தலைமையில் 'நிடி ஆயோக்' கூட்டம் முதல்வர் பங்கேற்பு
பிரதமர் தலைமையில் 'நிடி ஆயோக்' கூட்டம் முதல்வர் பங்கேற்பு
ADDED : மே 16, 2025 11:21 PM
சென்னை:பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நடக்கும், 'நிடி ஆயோக்' கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
மத்திய திட்ட குழுவிற்கு மாற்றாக, பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பின், ஒவ்வொரு ஆண்டும் நிடி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடப்பது வழக்கம்.
இதில், அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படும். மாநில திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து, இந்த கூட்டத்தில் முதல்வர்கள் எடுத்துரைப்பர்.
தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி, 2024 ஜூலையில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார்.
இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான நிடி ஆயோக் ஆலோசனை கூட்டம், வரும் 24ம் தேதி டில்லியில் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்கிறார். அப்போது, பிரதமரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.