மகாராஷ்டிரா நிறுவனத்துடன் என்.எல்.சி., இந்தியா ஒப்பந்தம்
மகாராஷ்டிரா நிறுவனத்துடன் என்.எல்.சி., இந்தியா ஒப்பந்தம்
ADDED : மே 31, 2025 05:15 AM

நெய்வேலி : என்.எல்.சி., இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம், மகாராஷ்டிரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
கடலுார் மாவட்டம், என்.எல்.சி., இந்தியா நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின், துணை நிறுவனமான என்.எல்.சி., இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்.ஐ.ஆர்.எல்), மகாராஷ்டிராவின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள் கட்டமைப்பு தொழில்நுட்ப லிமிடெட் (மஹாபிரெய்ட்) நிறுவனத்துடன் இணைந்து, கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மும்பையில் நடந்த விழாவில், மத்திய நிலக்கரித் துறை செயலர் விக்ரம் தேவ் தத்,, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி, மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள் கட்டமைப்பு தொழில்நுட்ப லிமிடெட் மேலாண் இயக்குநர் பிபின் ஷிர்மாலி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மூலம் உருவாகும் கூட்டு நிறுவனம், சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், கலப்பின மின்சாரம், மிதக்கும் சூரிய ஒளி மின்சாரம், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள், நீரேற்று சேமிப்பு மற்றும் சூரிய சக்தி பூங்காக்கள் என மொத்தம் 2,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கும்.
முதல் கட்டமாக 500 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தி, பின்னர் மகாராஷ்டிராவில் மொத்தம் 5,000 மெகாவாட் மின் உற்பத்தி வரை விரிவுபடுத்தப்படும்.
இந்த புதிய நிறுவனத்தில் என்.எல்.சி., இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் 74 சதவீத பங்குகளையும், மஹாபிரெய்ட் 26 சதவிகித பங்குகளையும் கொண்டிருக்கும்.
இது குறித்து மத்திய நிலக்கரித்துறை செயலர் விக்ரம் தேவ்தத் கூறுகையில், 'இந்த ஒப்பந்தம் நாட்டின் பசுமை ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்தும் கூட்டுப் பங்களிப்பை மேம்படுத்துவதில் இந்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
திட்டங்களை செயல்படுத்துவதில் என்.ஐ.ஆர்.எல்., ன் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவமும், மஹாபிரெய்ட்-ன் பிராந்திய பலமும் இணைந்து, நிலையான வளர்ச்சிக்கும், எரிசக்தி பாதுகாப்புக்கும் உந்து சக்தியாக செயல்படும்'என்றார்.