தகவல் கசியாமல் தடுக்கும் தகவல் ஆணையம் அப்பாயின்மென்ட் இல்லாமல் அனுமதி இல்லை
தகவல் கசியாமல் தடுக்கும் தகவல் ஆணையம் அப்பாயின்மென்ட் இல்லாமல் அனுமதி இல்லை
ADDED : ஜூன் 05, 2025 11:17 PM
சென்னை:சென்னையில் அமைந்துள்ள மாநில தகவல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், மனு கொடுக்க வருவோரை அதிகாரிகள் சந்திக்க அனுமதிப்பதில்லை. அப்பாயின்மென்ட் இல்லாமல் யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூறி, காவலாளிகள் திருப்பி அனுப்புகின்றனர்.
சென்னை நந்தனம் அன்பழகன் வளாகத்தில், மாநில தகவல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மனு கொடுக்கச் செல்லும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை, காவலாளிகள் உள்ளே அனுப்புவதில்லை. சில தினங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரூபன், தலைமை அலுவலகம் சென்றார்.
அவர் சென்ற நேரம் காவலாளி இல்லை. எனவே, கட்டடத்தின் இரண்டாம் தளத்திற்கு சென்றார்.
அங்கிருந்த அதிகாரிகள், இங்கு எப்படி வரலாம் என்று கேட்டு, அவரை வசைபாடி, தரைதளத்திற்கு அனுப்பி வைத்தனர்.
யாராக இருந்தாலும், ஆணையத்தின், 'இ - மெயில்' முகவரியில் விண்ணப்பித்து, முன்னதாக அப்பாயின்மென்ட் பெற வேண்டும். அப்போது தான் அதிகாரிகளை சந்திக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதே நிலைதான் அங்கு செல்வோர் அனைவருக்கும் ஏற்படுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மாநில தகவல் ஆணையத்திற்கு செல்வோரை, காவலாளிகள் அப்பாயின்மென்ட் உள்ளதா என்று கேட்கின்றனர். இல்லை என்றால், வெளியில் அனுப்பி விடுகின்றனர்.
மக்களுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டிய தகவல் ஆணையம், தகவல் கசியாமல் தடுக்க ரகசியம் காக்கிறதா என்று தெரியவில்லை. அரசு அதிகாரிகள் தகவல் தர மறுத்தால், ஆணையத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
ஆனால், ஆணையத்தின் அலுவலகத்திற்கே, மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இது, அரசு அலுவலகமா அல்லது தனியார் அலுவலகமா என்று தெரியவில்லை.
இந்நிலை இருந்தால், தமிழகத்தில் எந்த தகவலையும் மக்கள் பெற முடியாது. ஆணையமே தகவல் தர மறுத்தால், சாதாரண ஊழியர்கள் எப்படி தகவல் தருவர்.
எனவே, முதலில் ஆணையத்தில் உள்ளவர்கள் திருந்த வேண்டும். அனைத்து நேரம் இல்லாவிட்டாலும், தினமும் குறிப்பிட்ட நேரமாவது, ஆணைய அதிகாரிகள் மக்களை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.